இந்துக்களுக்குப் புனிதமான நகரம் காசி. அங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் கால பைரவருக்கு தென்னகத்திலும் ஒரு கோயில் உண்டு. அந்த ஒரே ஒரு கோயில், தமிழகத்தில் தருமபுரி, அதியமான்கோட்டையில் உள்ள ஸ்ரீதட்சிண காசி கால பைரவர் கோயில்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் 2015, பிப்ரவரி முதல் தேதிதான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, கும்பாபிஷேகத்துக்குப் பிறகான 48 நாள்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
பிரசித்தி பெற்ற இக்கோயிலின் தல புராணம் வருமாறு :
கடையேழு வள்ளல்களில் ஒருவரான தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் மரபினரால் கட்டப்பெற்ற இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
இந்தியாவில் ஸ்ரீ தட்சிணகாசி கால பைரவருக்கென்று தனித் திருத்தலம் இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. ஒன்று, கங்கை நதிக் கரையில் அமைந்துள்ள காசி. இன்னொன்று, தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் அமைந்துள்ள திருத்தலமாகும்.
வேத மகரிஷிகள் காசி சென்று பூஜை செய்து, கருவறைச் சிலையை இங்கு கொண்டுவந்து தென்திசை நோக்கி ஸ்ரீ தட்சிணகாசி கால பைரவர் என்று ஸ்தாபனம் செய்தனர். பைரவர்களில் 64 வகை உண்டு. இங்க இருக்கும் மூலவர், 64 பைரவர்களும் ஒரே சொரூபமாகக் காட்சி அளித்து உன்மத்த பைரவராகக் காட்சி அளிக்கிறார். மேலும் 9 நவக்கிரகக் கோள்கள்போல் பாவித்து அமைக்கப்பட்டுள்ளது. மூலவரின் திருவுருவில் 12 ராசிகளும் 9 நவக்கிரகக் கோள்களும் அடக்கம்.
எதிரிகளுக்குப் பயந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்து படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் செய்வதால் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். சிவனது அம்சமாகிய இவர், காவல் தெய்வமாகையால், காவல் குறியீடாக நாயினை வாகனமாகக் கொண்டுள்ளார்.
இத்திருக்கோயிலில் பூஜை செய்தால், நவக்கிரக தோஷங்களும் விலகுவதுடன் மும்மூர்த்திகளின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கிறது. எடுத்த காரியத்தில் வெற்றியும் ஜெயமும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகிறது. வறுமை நீங்குகிறது. சனீஸ்வர பகவானால் ஏற்படும் துன்பம், தொல்லைகள் நீங்குகின்றன. பில்லி, சூன்யங்கள் மறைகின்றன. வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது. வியாபாரத்தில் லாபம் கிடைக்கிறது. காலச் சக்கரத்தை இயக்குபவராக கால பைரவர் திகழ்கிறார்.
கார்த்திகை காலாஷ்டமி அன்று கால பைரவர் பிறந்த தினமும், சித்திரை அஷ்டமியும் மிக விஷேச தினங்களாகும். மேலும் பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமி மற்றும் வார ஞாயிறு ராகு காலங்களிலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதும். தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கால பைரவரைத் தரிசித்துச் செல்கின்றனர்.
கோவில், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.