அலங்காரப்பிரியை ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கு 108 நாட்களும், 108 சிறப்பு அலங்காரங்கள்
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் கருணைக்கடலாய் வந்தவருக்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளலாய்,
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் கருணைக்கடலாய் வந்தவருக்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளலாய், வேண்டும் வரமருளும் சக்தியாய், சாந்த சொரூபினியாய் அதர்மத்தை அழிக்கும் ஆதிபராசக்தியாய் விளங்கும் அலங்காரரூபினி அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மனாக தருமமிகு சென்னையின் மையப்பகுதியில் கலைஞர்களின் கனவுத்தொழிற்சாலையாக விளங்கக்கூடிய கோடம்பாக்கம் பகுதியில் நிலைக்கொண்டு அருள்பாலிக்கும் அன்னையின் திருத்தலமே அலங்காரபிரியை அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயம்.
ஸ்தல மகிமைகள்:
இத்தலத்தில் வீற்றிருக்கக்கூடிய அன்னை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் மங்கையரின் நலம் நாடும் மங்கையர்க்கரசியாகவும் குலம் காக்கும் ஈஸ்வரியாகவும், அற்புதங்கள் பலவும் நிழ்த்திடும் தேவியாகவும் அகிலத்தை காக்கும் அகிலாண்டேஸ்வரியாகவும், தன்னை தஞ்சம் அடைந்தவர்களுக்கு அபயம் அளிக்கும் தாயாகவும் விளங்குகிறார்.
அமைப்பு;
இத்தலத்தில் நிலைக்கொண்டு அருள்பாலிக்கும் அம்பாள் ஸ்ரீதேவி கருமாரியம்மன் அலங்கார பிரியையாக திகழ்கின்றாள். தம்மை வணங்கும் அடியவர்களின் இன்னல்களை போக்கும் வகையில் குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும், கிராமப்புறங்களில் எல்லைத்தெய்வமாகவும் அவதரித்து அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் இத்தலத்தில் அம்பாள் இப்பாரத்தேசத்தின் வடக்கே இமயம் முதல் தெற்கே குமரி வரையும் உள்ள முக்கிய சக்தி பீடங்களாக விளங்க கூடிய ஒவ்வொரு புண்ணிய ஸ்தலத்திலும் நிலைக் கொண்டிருக்கும் அம்பாளின் தத்ரூபமான இறைச் சொரூபங்களை தினசரி அலங்காரமாக அலங்கரிக்கப்படுகிறாள். இவ்வாறாக அலங்கரிக்கப்படும் அன்னையின் திருவுருவக் காட்சியினை தினந்தோறும் மாலை 5.30 மணியளவில் தீபதூப ஆராதனைகளுடன் கண்கொள்ளா காட்சியாக அன்னையை தரிசிக்க கண்கோடி வேண்டும். இத்தகையை சிறப்பு மிக்க அன்னையின் அலங்காரங்களை வகைப்படுத்தி வரிசைப்படுத்தி 108 நாட்களுக்கு, 108 அலங்காரங்களை அலங்கரித்து அன்னையினை மனங்குளிர செய்து அன்னையின் அருளைப் பெறுகிறார்கள்.
அலங்கார சிறப்புகள்:
மானிடர்கள் அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களை போக்கும் அன்னைக்கு பால்கோவா அலங்காரம், கண் இமையமல் தம்மடியவர்களை சேயைப் போல் காப்பவளுக்கு கல்கண்டு அலங்காரம், சுமங்கலிகளின் சுமைகளைத் தாங்கும் தாயிக்கு மஞ்சள் குங்குமமம் அலங்காரம், நவக்கிரங்களால் நமக்கு நல்லவைகள் கிட்டிட நவதானியத்தால் அலங்காரம், இப்புண்ணிய பூமியில் அவதரித்த அத்தனை ஜீவராசிகளும் புண்ணியத்துடன் வாழ்ந்திட பூமாலையால் அலங்காரம், மக்களின் வேதனைகளை தீர்ப்பவளுக்கு வேப்பிலையால் அலங்காரம் வாழ்வில் ஏற்பட்டுள்ள வெவ்வினைகள் அனைத்தையும் வேரோடுகளைபவளுக்கு வெட்டுவேரால் அலங்காரம் ஏழ்மையை களைபவளுக்கு எலுமிச்சையால் அலங்காரம் கிடைப்பதற்குரிய பொக்கிஷமாக வாழ்வில் பிள்ளை வரமான சந்தானபாக்கியம் தருபவளுக்கு சந்தன அலங்காரம் என பல்வேறு அலங்காரங்களும் 108 நாட்களும், 108 அலங்காரங்களுடன் (06.07.2015 முதல் 23.10.2015 வரை) அலங்கார நாயகியாய் அருளாட்சி செய்து அருளை பொழிகிறாள்.
அன்னை ஸ்ரீ தேவிகருமாரியம்மன்
இத்தலத்தில் தலவிருட்சமாக வேம்பு குடைப்போல் பறந்து விரிந்துள்ளது. அம்பாளின் முன்பாக திரிசூலம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. வேம்பின் அடியில் அன்னை நாகங்களின் வடிவில் தாய் கருமாறி உருமாறி நாக வடிவ சிற்பங்களாக காட்சி தருகிறாள்.
வழிபாடுகள்:
இத்திருக்கோயிலில் காலை மாலையென இருகால பூஜைகள் சிறப்புற நடக்கின்றன. அமாவாசை தினத்தில் நடக்கின்ற கூட்டு வழிபாடும், யாகமும் மிக முக்கிய அம்சமாகும். மேலும் இத்தலத்தில் அன்னையின் மற்றொரு அம்சமாக விளங்கக்கூடிய அம்பாள், அதர்வன காளியாக ஸ்ரீ மஹா ப்ரத்யங்கரா தேவி எனும் உற்சவ சக்தியாக விளங்குகிறாள். இத்தேவிக்கு அமாவாசை தினத்தில் நடத்தப்படும் கூட்டு வழிபாட்டில்வெற்றிலையால் பக்த கோடிகளால் தம் குறைகளை இவ்வெற்றிலையில் எழுதப்பட்டு மாலையாக ஸ்ரீ ப்ரத்யங்கரா தேவிக்கு அணிவிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்கு பிறகு வருகின்ற நான்காவது வார அமாவாசை யாகத்தில் யாகத்தீயிலிட்டு அம்பாளுக்கு வற்றல் மிளகாயுடன் ஹோமம் வளர்க்கப்படுகிறது. இவ்வாறாக வெற்றிலையால் வைக்கப்படுகின்ற தம்மடியவர்களின் கோரிக்கைகளை அன்னை நிறைவேற்றி வருவதாக ஐதீகம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகாலத்தில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் ராகுகாலத்தில் அன்னை ஸ்ரீப்ரத்யங்கரா கூட்டு வழிபாடும் வெற்றிலை வழிபாடும், இத்தலத்தின் மிக முக்கிய வழிபாடுகளாகவும், வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்தி வழிபாடுகளாகவும் திகழ்கின்றது.
அம்பாளுக்கு 108 சங்கு தீர்த்தங்களால் அபிஷேகம் நடத்தப்படுகிறது. இங்கு பூஜையில் வைக்கப்படும் ஒவ்வொரு சங்கிலும் ஈசனே குடிக்கொண்டு அம்பாளை குளிர்விப்பதாக ஐதீகம்.
ராகுகால பூஜை மிகவும் மகத்துவமானது. இப்பூஜையில் பங்கேற்கும் அடியவர்களின் சகலவிதமாக சர்ப்பதோஷங்களும் தீர்ந்து போவது கண்கண்ட உண்மையாகும்.
இருப்பிடம்:
சென்னையின் தென்பகுதியில் கோடம்பாடம்பாக்கத்திற்கும், வடபழனிக்கும் நடுவே ஆண்டவர் நகரில் அருளாட்சி புரிகிறாள். அன்னை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்பது போல். இத்தலம் எழிலுடன் அமைப்பில் சிறிதாக காணப்பட்டாலும் அம்பாளின் ஆற்றலும், கீர்த்தியும் சொல்லில் அடங்காது எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்.
தொடர்புக்கு என்.சங்கர், ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம், கோடம்பாக்கம், அலைபேசி 98843 28777