ஆன்மிகம்

மாங்கல்யம் அணிவதன் ஒன்பது தாத்பரியங்கள்

தினமணி

திருமண வைபவங்களின் போது மணமகன் மணமகளின் கழுத்தில் மாங்கல்யம் கட்டுதல் என்பது தொன்றுதொட்டு வரும் சடங்காகும்.

திருமணம் நிகழும் போது ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு பெண்ணுக்கு அணிவிப்பது ஏன்? அதன் தாத்பரியங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

சங்க காலத்தில் நடந்த திருமணங்களில் மணப்பெண்ணை வாழ்த்தி அவள் விரும்பிய மணவாளனுடன் அவளை ஒப்படைக்கும் போது அதற்குச் சாட்சியாக கட்டப்பட்டதே திருமாங்கல்யம். திருமாங்கல்யச் சரடுக்கு "தாலம்" என்ற மற்றொரு பெயரும் உண்டு. பின்னாளில் இது தாலியாக மாறியது. தாலம் என்பது பனை ஓலையினால் செய்யப்படுவதால், பெண்கள் இதை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், நிரந்தரமாக அணிந்திருப்பதற்கு உலோகத்தால் ஆன தாலியை பயன்படுத்தத் தொடங்கினர்.  

தாலியின் உண்மையான அடையாளம் தங்கத்தில் செய்வதல்ல எனக் குறிப்பிடும் சாஸ்திரம் ஒரு மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவதும் தாலி என்கிறது. தாலியின் மகிமை மஞ்சள், கயிறு கட்டுதல் ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே தவிர பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை. பின்னாளில், இது செல்வம் படைத்தோரால் மஞ்சள் பொன்னாக மாறியுள்ளது.

திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகின்றபோது தாலி என்பது பெண்களின் வாழ்க்கையின் ஆதாரமாக அமைகிறது. இதனைத் தாலி உறுதிப்படுத்துகிறது என்கிறோம். திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளைக் கொண்டே மாங்கல்யம் அணிவிக்கப்படுகிறது. இந்த ஒன்பது இழைகளும், வாழ்க்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிப்பதாக அமைகின்றது.

வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல், மேன்மை, தொண்டு, ஆற்றல், தூய்மை, தெய்வீக நோக்கம், உத்தம குணங்கள், விவேகம், தன்னடக்கம் ஆகியவையே அந்த ஒன்பது தாத்பரியங்களாகும்.

இத்தனை குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணிவிக்கப்படுகிறது. இதற்கு பஞ்ச பூதங்கள் சாட்சியாக வைத்து மாங்கல்யம் அணியப்படுகிறது. மேலும், மணமகன் மணமகளுக்கு மாங்கல்யம் கட்டும்போது...

"மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா!
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!

என்ற காயத்ரி மந்திரம் சொல்லப்படுகிறது. இதன் பொருளைத் தெரிந்து கொண்டால் மணவாழ்வின் மகத்துவம் புரியும்."மங்கலகரமானவளே! உன்னோடு இல்லற வாழ்வு நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த திருமாங்கல்ய சரடை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் மனைவியாக, என்னுடைய சுகதுக்கங்களில் பங்கு கொள்பவளாக சுபயோகங்களுடன் நூறாண்டு காலம் வாழ்க!'' என்பதே பொருள். இந்தக் கருத்தை உணர்ந்து மணமகனும் தாலிகட்டினால் மணவாழ்வில் எல்லா நாளும் இனிய நாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமாரியம்மன் கோயிலில் தீமிதி, கூழ்வாா்த்தல் திருவிழா

செய்யாற்றில் பலத்த மழை

பலத்த மழை: ஆரணியில் கால்வாய் அடைப்பு, கழிவுநீா் தேக்கம்

சாலை கெங்கையம்மன் கோயில் தோ் திருவிழா

ராஜீவ் காந்தி நினைவு நாள்...

SCROLL FOR NEXT