ஆன்மிகம்

நலம் அளிக்கும் நயப்பாக்கம் திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்

தினமணி

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், வழிபாடு சிறப்பு மிக்கதுமான பல திருக்கோயில்களைக் கொண்டு விளங்குவது தொண்டைநாடு.  சென்னைக்கு அருகே 'நயப்பாக்கம்' என்ற ஊரில் பழமை வாய்ந்த சிவாலயம் ஒன்று உள்ளது. இத்திருக்கோயிலில் இறைவன் எழுந்தருளியுள்ள கருவறைக்கு விமானம் ஏதுமில்லாமல் பசுமையான கொடிகள் படர்ந்து இறைவனுக்கு நிழல் அளிக்கும் காட்சி இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. இந்த கோயிலில் வழிபாடு ஏதும் இல்லாமல் செடி-கொடிகள் முளைத்து, சிதைந்த நிலையில் இருந்தது.

இந்நிலையில் சென்னை - அண்ணாமலையார் அறப்பணி குழுவினர் இக்கோயிலில் உழவாரப்பணியினை (2014-ம் ஆண்டு) மேற்கொண்டு செடி-கொடிகள் அகற்றப்பட்டு தூய்மை செய்யப்பட்டன. லிங்க வடிவில் இறைவன், அழகே உருவான அம்பாள், பைரவர், பிள்ளையார், சண்டிகேசுவரர், பிரம்ம சாஸ்தா வடிவில் முருகப்பெருமான் ஆகிய இறைவடிவங்கள் இங்கு வழிபாட்டில் இருந்தது அறியப்பட்டது. 

இக்கோயிலில் வழிபாட்டில் இருந்த சிற்பங்களின் கலைப்பாணியைக் கொண்டு இக்கோயில் பிற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகவும் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானதாகவும்  விளங்குவது அறியமுடிந்தது.

இக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் - இறைவிக்கு என்ன பெயர் என்பதை அறிய கல்வெட்டுச் சான்றுகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்ய திரு. வி.இராமசந்திரன் தலைமையில் அண்ணாமலையார் அறப்பணி குழுவினரும் மற்றும் இவ்வூரைச் சேர்ந்த ஆண்மிக அன்பர்களும் இணைந்து திருப்பணி மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டு திருப்பணியை மேற்கொண்டனர். திருப்பணிக்காக முயற்சிகள் மேற்கொண்டபொழுது காஞ்சி மகா சுவாமிகள் மீது பக்தி கொண்ட பெண்மனி மூலம் இறைவன் பெயர் 'மாசிலாமணீசுவரர்' என்றும், இறைவி 'நேத்ரதாயினி' என்பதும் அறியப்பட்டது.

இக்கோயிலின் கருவறையில் அர்த்தமண்டபத்தில் தெற்கு நோக்கி, காஞ்சி மகா பெரியவரின் சிலா விக்கிரக திருமேனி நிறுவப்பட உள்ளது. இத்திருமேனி மகா பெரியவர் தவக்கோலத்தில் அமர்ந்திருப்பது போல வடிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். காஞ்சி மடத்தின் 15-வது குரு அவர்கள் இங்கே தவமிருப்பதாக (கங்காதரேந்திர சரசுவதி சுவாமிகள்) கூறப்படுகிறது.  எனவே காஞ்சி மகா பெரியவர் பக்தர்களுக்கு இக்கோயிலில் எழுந்தருளி அநுக்கிரகம் செய்ய விருப்பம் தெரிவித்தார் என்பதும் ஆண்மீக பக்தர் மூலம் அறியப்பட்டது.

கருவறையின் தேவகோட்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை வடிவத்திருமேனிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் இக்கோயிலில் பரிவார தெய்வங்களாக ஹேரம்ப மகாகணபதி, சுவர்ண ஆகர்ஷண பைரவர் (தேவியுடன்) திருமேனிகள் நிர்மாணிக்கப்பட உள்ளது.

இக்கோயிலின் எதிரே அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. தாமரை மலர்கள் நிரம்பிய இத்தீர்த்தம் ‘பினாகபாணி தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது. எனினும் இக்குளம் சீரமைக்கப்பட வேண்டி உள்ளது.  

குளத்தை தூர் வாரி சீரமைத்தால் மக்களுக்கு பெரிதும் பயன்படும்.  திருக்கோயில் அருகே சாலை அருகில் ஒரு கல்லில் சிவலிங்கமும், நந்தியும் பொறிக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலின் எல்லையைக் குறிப்பிடும் வகையில் இத்தகைய சூலக்கல் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

புனருத்தாரணம் செய்யப்பட்ட இத்திருக்கோயிலில் நிகழும் மங்களகரமான ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் ஆனி மாதம் 21-ம் தேதி (05.07.17) புதன்கிழமை, த்வாதஸி திதி, அனுஷம் நக்ஷத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கன்யா லக்னத்தில் ஸ்ரீ நேத்ரதாயினி ஸமேத மாசிலாமணீஸ்வரர் ஆலய மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 15 யாக குண்டங்கள் நிறுவப்பட்டு யாகசாலை பூஜைகள் ஜூலை 03-ம் தேதியன்று துவங்குகின்றன.

பூந்தமல்லியை அடுத்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் மேவளூர்குப்பம் கிராமத்தை அடுத்து (தண்டலம் கூட்டு ரோடிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது. கும்பாபிஷேகம் அன்று காலை 7.00 முதல் 10.00 மணி வரை தண்டலம் கூட்டு ரோடிலிருந்து கோயிலுக்குச் செல்ல இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி மகா பெரியவர் அனுக்கிரகத்தின்படி நேத்ரதாயினி அம்பாளை வழிபட கண் நோய்கள் நீங்கும், சந்தான பாக்கியம் உண்டாகும். மாசிலாமணிசுவரரை வழிபட புத்தி கூர்மை ஏற்பட்டு ஞானம் உண்டாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நலம் அளிக்கும் நயப்பாக்கம் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாழ்வில் அனைத்து நன்மைகளையும் அடைவோம்!

தொடர்புக்கு : 9884080543 | 9443642043.

- கி. ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT