வணிக முறையில் பார்த்தால் பரிவர்த்தனை என்றால் ஒன்றைக் கொடுத்து இன்னொன்று வாங்கிக்கொள்வது. அந்த முறையில் ஜோதிடத்தில் பரிவர்த்தனை பெற இரு கிரகங்கள், இரு பாவங்கள் அவசியம். இரு கிரகங்கள் தங்கள் வீட்டில் அமராமல் மாற்றி அமர்ந்து பலன்களை தர வல்லது. எடுத்துக்காட்டாக ராசி கட்டத்தில் துலா ராசியின் அதிபதி சுக்கிரன் கடகத்தில், கடகத்தின் அதிபதி சந்திரன் துலாத்தில் அமர்ந்து இருப்பது பரிவர்த்தனை யோகம்.
பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் எப்பொழுதும் ஆட்சியாகவோ உச்சமாகவோ தன் செயல்களை செய்விக்கும். இதன் பலம் அளவு என்பது லக்கனம் மற்றும் பார்வை பொருத்து மாறுபடும்.
தானென்ற கோள்களது மாரிநிற்க
தரணிதனில் பேர்விளங்குந் தனமுமுள்ளோன்
ஊனென்ற உடல் நாதன் பாம்புகூடில்
உத்தமனாம் யோக்கியனாம் புனிதன் சேயன்
கோனென்ற குமரியுட பூசைசெய்து
கொற்றவனே குவலயத்தில் வாழ்ந்திருப்பான்
வானென்ற , மறலிபய மில்லையில்லை
மைந்தனேவிட மறிந்து வழுத்துவாயே
(புலிப்பாணி ஜோதிடம் 300 )
ஒன்பது கோள்களில் இராகு கேது நீங்கலாக ஏனையவை தங்களுக்குள் இடம் மாறி பரிவர்த்தனை பெரும்பொழுது, அந்த ஜாதகன் பூமியில் பேரும் புகழும் மிகும். வெகுதனமும் உடையவனேயாவான். உடல் நாதனான சந்திரனுடன் பாம்பு கூடினும் உத்தமனாகவும், யோக்கியனாகவும், புனிதத் தன்மையுடையவனாகவும் அச்செல்வன் இந்நிலவுலகில் வாழ்ந்திருப்பான். அவனுக்கு எமபயம் இல்லவே இல்லை. இதனை ஏனைய கிரக நிலவரங்களையும் நன்கறிந்து கூறுவாயாக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
கிரக பரிவர்த்தனை என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல் பாவத்தின் அடிப்படையில் மற்றும் அவற்றின் ஆதிபத்தியம் கொண்டு பார்க்கவேண்டும். ஜாதகத்தில் இரு பாவத்தின் அதிபதிகள் மாறிமாறி அமர்ந்து அந்தெந்த பாவப்பலன் இல்லாமல் மாறி அமர்ந்த பலனுக்கு வேலை செய்யும். உதாரணமாக லக்னாதிபதி பத்தில் அமர்ந்திருக்க, பத்தாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்குப் பரிவர்த்தனை யோகம் ஏற்படுத்தி அவற்றின் பலனை மாற்றிச் செய்யும் தன்மை கொண்டது.
"உள்ளசன் மாதிலாபத்திலுற வேயந்லாபாதி
தள்ளுஞ்சன்மந்தனிலிருக்கத் தனத்தானதான்
பத்திலுறக் கொள்ளும்பத் தோனிரண்டுறவே கொண்டு
சென்மந்திரமாகவள்ந்திரயோகமென வழுத்தும் பலன்களினி துரைப்பாம்
லக்கினாதிபதி 11-ல், 11 ஆம் அதிபதி லக்கினத்தில், 2-ஆம் அதிபதி 10-ல், 10-ஆம் அதிபதி 2-ல் இருக்க லக்கினம் ஸ்திர லக்கினமாக இருந்தால் ஜாதகர் இந்திரயோகத்தை அனுபவிப்பார்கள். சுகபோக வாழ்வு அமையும்.
ஜோதிடர்கள் ஆட்சி உச்சம் என்ற நிலையைப் பார்க்கும்பொழுது தசாபுத்திக்காலத்தில் எந்தெந்த கிரகம் மற்றும் நட்சத்திரம் பரிவர்த்தனை பெற்றுள்ளது என்று பார்க்கவேண்டும். இவற்றில் நாங்கள் ராசி பரிவர்த்தனை மற்றும் நட்சத்திரம் பரிவர்த்தனை பற்றி ஆராய்ந்து பலன் சொல்லுவோம். ஆனால் ஆராய்ச்சியில் பார்த்தால் ராசி பரிவர்த்தனை அதீத யோகப்பலனும், நட்சத்திர பரிவர்த்தனை என்பது கொஞ்ச பலனை குறைத்தும் செயல்படும்.
வேத ஜோதிடத்தில் பரிவர்த்தனை என்பது கணிதம் போல் வேலை செய்யும் எப்படி என்று கேட்கறீர்களா! இரு சுபர் பரிவர்த்தனை பெரும்பொழுது அதீத யோக பலனையும் (80%), இரு பாவர் (இரு எதிர்மறை) பரிவர்த்தனை பெரும்பொழுது குறைந்த யோக பலனையும் (60%) மற்றும் ஒரு சுபர் ஒரு பாவர் பரிவர்த்தனை நடைபெறும்பொழுது கெட்ட பலனையும் ஏற்படுத்தும். மறைவுஸ்தானம் என்று கூறப்படும் 6, 8, 12 அதிபதிகள் தங்களுக்குள் மாறி பரிவர்த்தனை பெரும்பொழுது விபரீத யோக பலனையும் தரவல்லது என்று கூறப்படுகிறது.
"கூசாது கோணாதி கேந்திராதி
குறிப்பான பரிவர்த்தனையாய் இருக்க
தேசாதிபத்தியமும் வருவதோடு
திரளான தானியங்கள் கூடும் பாரு "
1-5-9-ஆம் அதிபதிகளும் 4-7-10-ஆம் அதிபதிகளும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகர் உலகை ஆள்வார்கள்। அதிகம் செல்வம் பெறுவார்கள்। பரிவர்த்தன யோகம் என்பது வீட்டு எஜமான் நல்லவரா கெட்டவரா என்று பார்த்து அதற்கேற்ப சுப தன்மையா அல்லது அசுப தன்மையா என்றெல்லாம் பார்க்கவேண்டும். முக்கியமாக மூன்று வகையான பரிவர்த்தன யோகம் உள்ளது அவை பல தீபிகையில் தைன்ய யோகம், கல யோகம், மாகயோகங்கள் என பரிவர்த்தனை யோகங்களை பற்றியும், அவற்றின் ஆக மொத்தம் அறுபத்தாறு வகையாகும் (தைன்ய: 30 + கல: 8,மகாயோகம் 28 ) என்று சொல்லப்படுகிறது.
மஹா பரிவர்த்தனை யோகம்
இது மிகவும் அதிர்ஷ்டமிக்க யோகம் இந்த யோகம் அமைய கொடுத்துவைத்திருக்க வேண்டும். நல்ல நண்பர்கள் இருவர் கூடினால் என்னவாகுமோ அவ்வாறு நல்ல ஸ்தானம் என்று சொல்லப்படும் 1, 2, 4, 5, 7, 9, 10, 11ம் இடத்து அதிபதிகளில் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இடம் மாறி அமரும்போது இந்த யோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, வீடு மனை, சொத்து சுகம், அஸ்தஸ்து, மரியாதை, உடல் திடம், பதவி உடன் அதிகாரம் என்று அந்தெந்த பாவத்திற்கு ஏற்ப கிட்டும்.
கல யோகம்/கஹல யோகம்
இந்த யோகம் மகா யோகத்திற்கு அடுத்தபடி ஆகும். மூன்றுக்கு உடையவன், 1, 2, 4, 5, 7, 9, 10, 11ம் இடத்து அதிபதியானால் பரிவர்த்தனை பெரும்பொழுது அல்லது அவ்வீட்டு அதிபர்கள் மூன்றாம் அதிபதியோடு தொடர்பு பெரும்பொழுது பெரும் பலன்கள். இது கொஞ்சம் சுமாரான பலனை தரவல்லது. இந்த அமைப்பு உள்ள ஜாதகர்கள் முயற்சியில் தன்னை முன்னேற்றத்திற்காக அதிகம் உழைக்கும் நிலை ஏற்படும். எதுவும் சுலபமாக இல்லாமல் கஷ்டப்பட்டு கிட்டும்.
தைன்ய யோகம் தைந்ய யோகம்
இந்த யோகமானது நல்ல யோகம் அல்ல, இது ஒரு துர் யோகம் என்று சொல்லலாம். இந்த யோகம் மறைவு ஸ்தானம் என்று சொல்லப்படும் 6, 8, 12ம் வீடுகளுக்கு ஆட்சி அதிபதிகள் 1, 2, 4, 5, 7, 9, 10, 11 பாவக அதிபதிகளுடன் பரிவர்த்தனை அடைவதாலும் ஏற்படுகின்ற யோகம். இவை தீய பாவகங்களின் தொடர்பு பெறுவதால் தீமையான பலன்கள் அதிகம் தரும். பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட வீடுகளால், வீட்டு அதிபதிகளால் உண்டாகும் பலன்கள் கெட்டுவிடும். ஜாதகனுக்குத் தொடர்பு கொண்டவர்கள் கெட்ட சகவாசம் எப்படி இருக்கும் துஷ்டத்தனம் மிகுந்தவர்களாக அல்லது ஒழுக்கமற்றவர்களாக ஜாதகர் இருப்பார்.
ஒரு ஜாதகத்தில் ஐந்துக்கு மேற்பட்ட கிரகங்கள் பரிவர்த்தனை பெரும். அதிக பரிவர்த்தனை பெற்ற சுப கிரகங்கள் உள்ள ஜாதகன் அரசியலில் ஈடுபாடும், ஒரு பெரிய நாட்டை ஆளும் தகுதி பெற்றவராயும் பெயரும், புகழும் அடைவார். ஒரு நல்லாரோடு நல்லோர் சேரும்பொழுது நல்ல எண்ணங்கள் செயல்கள் ஏற்படும். அதுபோல் நல்ல சுபரோடு சேரும். அசுபர் சேர்ந்தால் சில நேரங்களில் தீய செயல் நடைபெறும் என்பது இந்த யோகத்தின் சூட்சம விதி. இந்த பரிவர்த்தனை யோகம் என்பது நல்ல கிரகங்கள் மற்றும் சுப வீடுகள் பரிவர்த்தனையில் சேரும் பொழுது பாவம் அதீத வலுப்பெறும்.
குருவே சரணம்!
- ஜோதிட சிரோன்மணி தேவி
Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.