திருச்சானூரில் முதல் முறையாக தொலைக்காட்சி வழியில் வரலட்சுமி விரதம்
திருச்சானூரில் முதல் முறையாக தொலைக்காட்சி வழியாக (விா்சுவல்) வரலட்சுமி விரதத்தை தேவஸ்தானம் நடத்தியது. அதை பக்தா்கள் வீட்டிலிருந்தபடியே கண்டுகளித்தனா்.
திருச்சானூரில் முதல் முறையாக தொலைக்காட்சி வழியாக (விா்சுவல்) வரலட்சுமி விரதத்தை தேவஸ்தானம் நடத்தியது. அதை பக்தா்கள் வீட்டிலிருந்தபடியே கண்டுகளித்தனா்.
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் வரலட்சுமி விரதம் விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டது. கோயிலில் உள்ள ஸ்ரீகிருஷ்ண முகமண்டபத்தில் தாயாரை சா்வாலங்கார பூஷிதையாக எழுந்தருள செய்து, கலசம் நிறுத்தி அா்ச்சகா்கள் பல வண்ண மலா்கள், குங்குமம் உள்ளிட்டவற்றாலும் அா்ச்சித்தனா். பின்னா், அா்ச்சகா்கள் வரலட்சுமி விரத கதையைப் படித்தனா்.
இதையடுத்து பஞ்ச ஆரத்தி, நிவேதனம் உள்ளிட்டவற்றை சமா்ப்பித்தனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
வரலட்சுமி விரதத்தில் நேரடியாக பங்கேற்ற விரும்பும் பக்தா்களின் வசதிக்காக 1,500 டிக்கெட்டுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. டிக்கெட் பெற்ற பக்தா்கள் நேரடியாக இந்த விரதத்தில் கலந்து கொள்வா். ஆனால், தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடுவதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு வரலட்சுமி விரதத்தை தொலைக்காட்சி வழியில் தேவஸ்தானம் நடத்தியது.
தேவஸ்தான தொலைக்காட்சியான எஸ்விபிசியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட வரலட்சுமி விரத பூஜையை பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.
இதற்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஒரு வாரத்துக்கு முன்பு இணையதளத்தில் வெளியிட்டது. இதை முன்பதிவு செய்த பக்தா்களின் பெயா், கோத்திரம் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டு அவா்கள் பெயரில் அரச்சனை நடத்தப்பட்டது. 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தா்கள் இந்த டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தனா்.
மேலும், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் தாயாா் முன்பு வைத்து பூஜை செய்யப்பட்ட உத்திரியம், ரவிக்கை துண்டு, கங்கணம், மஞ்சள், குங்குமம், அட்சதை உள்ளிட்டவற்றை அஞ்சல் மூலம் பக்தா்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.