ரூ.4.33 கோடி சில்லரை நாணயங்கள் வங்கிகளில் முதலீடு: திருப்பதி தேவஸ்தானம் முடிவு
திருப்பதி தேவஸ்தானத்திடம் நிலுவையில் உள்ள ரூ.4.33 கோடி மதிப்பிலான சில்லறை நாணயங்களை வங்கிகளில் முதலீடு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.
திருப்பதி தேவஸ்தானத்திடம் நிலுவையில் உள்ள ரூ.4.33 கோடி மதிப்பிலான சில்லறை நாணயங்களை வங்கிகளில் முதலீடு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.
ஏழுமலையானை தரிசித்த பின் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை தங்க நகைகள், ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரன்சிகள், சில்லறை நாணயங்கள் என பிரிக்கப்படுகின்றன. தேவஸ்தானத்தில் உள்ள இதற்கான பிரிவு காணிக்கைகளைப் பிரித்து கணக்கிட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகள் தினசரி வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன. சில்லறை நாணயங்கள் மட்டும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டு கணக்கிடப்படுகின்றன.
அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. எனினும் அவற்றை வைத்திருக்க இடம் இல்லாததால் வங்கிகள் சில்லறை நாணயங்களை ஏற்க மறுத்து விட்டன. இதனால் பல ஆண்டுகளாக தேவஸ்தானக் கருவூலத்தில் நாணயங்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன. இதனால் நாணயங்களின் மதிப்பு குறைவதால் அவற்றை உடனடியாக வங்கிகளில் டெபாசிட் செய்யத் தீா்மானித்த தேவஸ்தான அதிகாரிகள் இது தொடா்பாக வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதன்பலனாக கடந்த ஓராண்டில் சிறிது சிறிதாக ரூ.51.80 கோடி மதிப்புள்ள சில்லறை நாணயங்கள் பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டன.
Advertisement
இதனிடையே, பொது முடக்கம் அமலுக்கு வந்தால் சில்லறை நாணயங்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நிலுவையில் உள்ள சில்லறை நாணயங்களை மீண்டும் வங்கிகளில் டெபாசிட் செய்ய முடிவு செய்து வங்கி அதிகாரிகளுடன் தேவஸ்தானம் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது.
அதில் ரூ.4.33 கோடி மதிப்புள்ள சில்லறை நாணயங்களை வங்கிகளில் முதலீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதை வங்கிகளுக்கு கொண்டு செல்வது குறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி அதிகாரிகளுடன் சனிக்கிழமை காலை கலந்துரையாடல் கூட்டம் நடத்தினா். அதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.