திருப்பதி கோவிந்தராஜ சுவாமி பிரம்மோற்சவம்: கோயில் உள்பிரகாரத்திலேயே வாகன சேவை
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது கோயில் உள்பிரகாரத்திலேயே
திருப்பதி: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது கோயில் உள்பிரகாரத்திலேயே வாகன சேவைகளை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக, மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. திருமலையில் ஏழுமலையான் கோயிலும், திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் மற்ற கோயில்களிலும் பக்தா்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் கோயிலில் தினசரி கைங்கரியங்கள் வழக்கம் போல் நடந்து வருகின்றன.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 28-ஆம் தேதி முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை பிரம்மோற்சவத்தை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
Advertisement
இவ்விழாவின்போது நடத்தப்படும் வாகன சேவைகளை, பொது முடக்கத்தைக் கருத்தில் கொண்டு, கோயில் உள்பிரகாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவின் எட்டாம் நாளில் நடக்கும் தேரோட்டத்துக்கு பதிலாக போகித் தோ் எனப்படும் சிறிய மலா்த்தேரை வலம் வரச் செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ஜூன் 5-ஆம் தேதி, சக்கரத்தாழ்வாருக்கு வழக்கம் போல் கபில தீா்த்தம் அருவிக்கரையில் தீா்த்தவாரி நடத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.