முகப்பு
திருப்பாவை

திருப்பாவை - பாடல் 5

ஆயர்பாடியில் வாழ்ந்த கோபியர்கள் அனைவரும்

Updated On : 20 டிசம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:26 AM

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி
 

விளக்கம்

Advertisement

ஆயர்பாடியில் வாழ்ந்த கோபியர்கள் அனைவரும் கண்ணனை தங்களில் ஒருவனாகத்தான் கண்டார்கள். ஆயர் சிறுமிகளோ, கண்ணனை தங்களது மனம் கவர்ந்த காதலானாக குறும்பு செய்யும் சிறுவனாகத் தான் கண்டனர். ஆனால் ஆண்டாள் பிராட்டியோ, ஆய்ப்பாடியில் வாழ்ந்த சிறுமியாக தன்னை கற்பனை செய்துகொண்டு பாடியபோதும் கண்ணனை திருமாலின் அவதாரமாகத்தான் கருதுகின்றாள். யசோதை இளஞ்சிங்கம் நாராயணன் என்று முதல் பாடலில் குறிப்பிட்ட ஆண்டாள், ஆய்ப்பாடியில் வாழும் சிறுமிகள் தங்களுடன் விளையாடும் கண்ணனை, மாய விளையாட்டுகள் விளையாடும் சிறுவன் என்று எண்ணிவிடாமல், அவன் திருமாலின் அவதாரம் என்பதை புரிந்துகொண்டு, மனம் மெய் மொழிகளால் அவனை வணங்கி துதிக்க வேண்டும் என்பது இந்த பாடலில் உணர்த்துகின்றார். அவ்வாறு வழிபட்டால், நம்மைப் பற்றியுள்ள தீவினைகளும், பற்றவிருக்கும் தீவினைகளும், தீயினில் இடப்பட்ட தூசுகள் போன்று அழிந்துவிடும் என்பதும் உணர்த்தப்படுகின்றது. நம்மிடையே வளர்ந்தாலும், அவன் மதுரையில் பிறந்து மாயமாக நம்மிடையே வந்து கலந்தவன் என்பதை குறிப்பிட்டு, சிறிய குழந்தையாக இருந்த போதே மாயங்கள் புரிந்தவன் என்பதை உணர்த்தும் வண்ணம், வடமதுரை மைந்தன் என்று கண்ணனை ஆண்டாள் இங்கே குறிப்பிடுகின்றார். இறைவனின் திருநாமங்களை எப்போதும் சொல்ல வேண்டும் என்று மூன்றாவது பாடலில் உணர்த்திய ஆண்டாள். அவ்வாறு அவனது திருநாமங்களை சொல்வதால் ஏற்படும் பயனை இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்துகின்றார்.

பொழிப்புரை

பலவிதமான மாயங்கள் செய்து நம்முடன் விளையாடும் கண்ணன், நம்மில் ஒருவன் அல்லன்; அவன் வடமதுரையில் பிறந்து, எவரும் அறியாத வண்ணம் மாயமாக ஆய்ப்பாடி வந்து தங்கியவன்; தூய்மையான, வளமையான யமுனை நதியின் கரையில் வளர்பவன்; அவன் ஆயர் குலத்தில் தோன்றிய அழகிய விளக்காவான்; அவன் பெற்ற தாயின் புகழ் உலகெங்கும் ஓங்கி விளங்கச் செய்தவன்; வல்லமை படைத்தவனாக விளங்கியபோதும், யசோதைத் தாய் அவனை தாம்புக் கயிற்றினால் கட்டியபோது, மிகவும் எளியவனாக கட்டுண்டவன்; இத்தகைய சிறப்புகள் பெற்ற கண்ணனை, நாம் நம்மில் ஒருவனாக நினைக்காமல், அவன் திருமாலின் அவதாரம் என்பதை உணர்ந்து, நாம் அனைவரும் அகத் தூய்மையும் புறத் தூய்மையும் கொண்டவர்களாய், மலர்களை அவன் மீது தூவியும், அவனது புகழினை நமது வாயினால் பாடியும், அவனது பெருமை மிகுந்த குணங்களை நமது மனதினில் சிந்தித்தும் அவனை வழிபடுவோம். அவ்வாறு அவனை வழிபட்டால், நாம் இந்நாள் வரை சேமித்து வைத்துள்ள பாவங்களும், இனி வரப்போகும் நாட்களில் அறியாமையால் நாம் செய்யவிருக்கும் பாவங்களும், நெருப்பினில் இடப்பட்ட தூசு போன்று காணாமல் போய்விடும். இந்த செய்தியை நாம் ஒருவருக்கு ஒருவர் சொல்லியவாறு நீராடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.