திருப்பாவை

திருப்பாவை - பாடல் 22

என். வெங்கடேஸ்வரன்

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பு எய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுசிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்


பாடியவர் -  பவ்யா ஹரி

விளக்கம்

மாளிகையின் உள்ளே புகுந்த ஆயர் சிறுமிகள், துயிலெழுந்த கண்ணபிரானின் திருப்பார்வை தங்கள் மீது படவேண்டி, கண்ணனை இறைஞ்சும் பாடல். கண்ணபிரானின் கடைக்கண் பார்வை, நமது பாவங்கள் அனைத்தையும் போக்கவல்லது என்பதை உணர்த்தும் பாடல்.

பொழிப்புரை

அழகியதும் அகன்றதும் ஆகிய இந்த நிலவுலகத்தில் உள்ள பல அரசர்கள், தங்களது செருக்குகள் நீங்கப்பெற்று, உனது கடைக்கண் பார்வைக்கு ஏங்கியவர்களாய், உனது படுக்கைக் கட்டிலுக்கு கீழே, கூட்டமாக குழுமி இருக்கின்றார்கள். நாங்களும், அவர்களைப் போன்று ஒரு குழுவாக, உனது கட்டிலின் தலைப் பக்கத்தில், உனது கடைக்கண் பார்வையினை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். கிண்கிணி மணியின் வாயில் பொறிக்கப்பட்டு இருக்கும் தாமரைப் பூ போன்றதும் செம்மையான நிறத்தில் உடையதும் ஆன உனது கண்களை சிறிது சிறிதாக மலர்ந்து எங்களை நீ நோக்கமாட்டாயா, சூரியனும் சந்திரனும் போன்று ஒளி வீசும் உனது கண்கள் கொண்டு, எங்களை நீ நோக்கினால், வினைகளால் எங்கள் மீது படர்ந்துள்ள பாவங்கள் நீங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT