காவிரி தென்கரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 18-வது தலமாக திருக்கருகாவூர் விளங்குகிறது. இத்தலம், மகப்பேறு மற்றும் கருவைக் காப்பாற்றிக் கொடுக்கும் தலமாகச் சிறப்பு பெற்றது.
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என 2 பதிகங்கள் இருக்கின்றன.
எப்படிப் போவது
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரில் இருந்து தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து வடகிழக்கே 20 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திட்டை, மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கருகாவூர் உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள், இதர வாகனங்கள் மூலமாக இத்தலத்தை சுலபமாக அடையலாம்.
ஆலய முகவரி |
இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சிவபெருமான், உமாதேவியுடனும் முருகனுடனும் இருக்கும் திருக்கோலம் சோமஸ்கந்தர் அருட்கோலம். அவ்வாறு சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள கோவில்களில் திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோவிலும் ஒன்றாகும். இத்தலத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ளது. இத்தகைய அமைப்பு சில சிவாலயங்களில்தான் காணப்படுகிறது. இம்மூன்று சந்நிதிகளையும் ஒருசேர வலம் வர சுற்றுப் பிராகாரமும் உண்டு.
கோவில் அமைப்பு
460 அடி நீளமும், 285 அடி அகலமும் உள்ள இக்கோவிலுக்கு, கிழக்கில் ஒரு 5 நிலை ராஜகோபுரமும் தென் திசையில் மற்றொரு நுழைவாயிலும் இருக்கிறது. கிழக்குக் கோபுர வாயிலுக்கு வெளியே தேவலோகப் பசுவான காமதேனுவால் உருவாக்கப்பட்ட ஷீரகுண்டம் என்ற தீர்த்தம் உள்ளது. கிழக்குக் கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் மூன்று நிலைகளை உடைய 2-ம் கோபுரம் வாயில் வரை நீண்ட மண்டபம் இருக்கிறது. 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், இரட்டை நந்திகள் ஆகியவற்றைக் காணலாம். இங்கிருந்து உட்பிராகாரத்தை வலம் வரத் தொடங்கினால், 63 மூவர் சந்நிதி, நால்வர் சந்நிதி, நிருதி விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானை உடனாய ஆறுமுகர் சந்நிதி மற்றும் மகாலட்சுமி சந்நிதி ஆகியவற்றைக் காணலாம்.
கருவறைக்குள், கிழக்கு நோக்கியபடி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர், சுயம்புவாகத் தோன்றியவர். முல்லைவனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால், இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக் கொடிகளின் தழும்பு இருக்கக் காணலாம். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. அபிஷேகம் எல்லாம் ஆவுடையாருக்கே செய்யப்படுகிறது. லிங்கத்துக்குப் புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. இப்படி வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால், தீராத வியாதிகள் யாவும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்கள் அனுபவத்தில் கண்டு அறிந்த உண்மை. வெளியில் இருந்து கொண்டுவரும் புனுகு, சுவாமிக்கு சாத்த அனுமதி இல்லை. தேவஸ்தானமே அதற்கு உரிய தொகையைப் பெற்றுக்கொண்டு புனுகு சாத்துகிறது.
இறைவியின் சந்நிதி, சுவாமி சந்நிதிக்கு இடப்புறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்து இறைவி கருகாத்தநாயகி என்றும் கர்ப்பரட்சாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். குழந்தைப்பேறு கிட்டவும், திருமணம் நடைபெறவும் அம்பாள் கருகாத்தநாயகியை பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர்
புராண வரலாறு
நிருத்துவ முனிவரும் அவர் மனைவி வேதிகையும் இத்தலத்தில் வசித்து வந்தனர். ஒருமுறை, நிருத்துவ முனிவர் ஒரு முக்கியப் பணியாக வெளியூர் செல்ல நேர்ந்தது. அவர் மனைவி வேதிகை அப்போது கர்ப்பமுற்று இருந்தாள். அக்காலம் நல்ல வெய்யில் காலமாதலால் வேதிகை மிகவும் களைப்புற்று வீட்டில் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தாள்.
ஊர்த்துவ முனிவர் என்ற மற்றொரு தவசீலர், இந்த ஊர் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். வெய்யில் காலம் காரணமாக, அவரும் மிகவும் களைப்புற்று வீட்டில் இருப்பவர்களால் உணவும் தண்ணீரும் கிடைக்கும் என்று கருதி, நிருத்துவ முனிவரின் வீட்டுக்குள் குரல் கொடுத்து கூப்பிட்டார். ஆனால் யாரும் வெளி வராதது கண்டு உள்ளே எட்டிப் பார்க்க, வேதிகை அவருக்கு எதிர்புறமாக திரும்பிப் படுத்து உறங்கக் கண்டார்.
வேதிகை கர்ப்பமுற்று களைப்பால் படுத்திருப்பதை அறியாத அவர், கோபத்தில் அவளைச் சபித்துவிட்டு சென்றுவிட்டார். வேதிகை விழித்து எழுந்து பார்ப்பதற்குள் அவர் வெகு தூரம் சென்றுவிட்டார். முனிவரின் கோபத்துக்கு ஆளான வேதிகைக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. வேதிகை, முல்லைவன நாதரையும் இறைவியையும் வணங்கி தன் கர்ப்பத்தைக் காப்பாற்றச் சொல்லி வழிபட்டாள். இறைவியும், வேதிகையின் பக்திக்கு மெச்சி அவள் கருவைக் காப்பாற்றி அருள் புரிந்தாள்.
ஊர் திரும்பிய நிருத்துவ முனிவர் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு, இறைவியை வணங்கி இத்தலத்துக்கு வந்து வழிபடும் கர்ப்பிணிகள் அனைவருக்கும் சுகப்பிரசவம் ஆகும்படியும், அவர்கள் கருவைக் காத்து ரட்சிக்கும்படியும் வரம் வேண்டினார். அவ்வாறே இறைவியும் வரம் அளித்து அருள் புரிந்தாள். அன்று முதல், இத்தலத்து இறைவி கருகாத்தநாயகி என்றும் கர்ப்பரட்சாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள்.
இத்தலத்துக்கு வந்து வழிபடுவோருக்கு குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை என்பதும், பிரசவ கால வேதனைகள் ஏற்படுவதில்லை என்பதும் அனுபவத்தில் காணும் உனமையாகும்.
தலத்தின் சிறப்பு
திருமணம் கூடிவர படிக்கு நெய் மெழுகுதல்
திருமணம் கூடிவராத கன்னியரும், குழந்தை இல்லாத பெண்களும் இக்கோவிலுக்கு நேரில் வந்து அம்பாள் சந்நிதி படியில் நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு உண்டாகும். அமாவாசை நாட்களில் இதைச் செய்வது மிகுந்த பலன் அளிக்கும்.
குழந்தை பாக்கியம் பெற நெய் மந்திரித்தல்
திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதவர்களுக்குக் கர்ப்பரட்சாம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, தம்பதிகள் தொடர்ந்து 48 நாட்கள் இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர விரைவில் கருத்தரிக்கும்.
சுகப்பிரசவம் ஆக
கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக கர்ப்பரட்சாம்பிகை திருப்பாதத்தில் வைத்துக் கொடுக்கப்படும் விளக்கெண்ணெய்யை பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் தடவினால், எந்தவிதக் கோளாறுகளோ பேறுகால ஆபத்துகளோ பின்விளைவுகளோ இல்லாமல் சுகபிரசவம் ஆகும்.

சுயம்பு லிங்கமாகத் தோன்றிய மூலவரைத் தவிர இங்குள்ள நந்தியும், தலவிநாயகரான கற்பகவிநாயகரும் சுயம்புவாகத் தோன்றியவர்கள். பங்குனி மாதப் பௌர்ணமி அன்று சந்திரனின் ஒளி சிவலிங்கத் திருமேனியில் படுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்.
பஞ்ச ஆரண்ய ஸ்தலங்கள்
பஞ்ச ஆரண்ய ஸ்தலங்கள் என்று குறிப்பிடப்படும் 5 சிவஸ்தலங்களை ஒரே நாளில் 5 கால பூஜைகளில் கலந்துகொண்டு வழிபாடு செய்துவந்தால், இப்பிறவியில் செய்த சகல பாவங்களும் நீங்கி மறு பிறவி இல்லா நல்வாழ்வு கிட்டும் என்று அகஸ்திய முனிவர் கூறியுள்ளார். அந்த வகையில் திருக்கருகாவூர் ஸ்தலம் விடியற்காலை உஷத்காலம் (காலை 5.30 மணி முதல் 6 மணி வரை) வழிபாடு செய்ய வேண்டிய தலமாகும்.
இந்த பதிகத்தைப் பாடியவர்கள் குமாரவயலூர் திருஞான பாலசந்திரன் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் சுந்தர்

courtesy : www.shivatemples.com

அடுத்த வாரம் சந்திப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.