கட்டுரைகள்

செல்லூரில் உள்ள குணாம்பிகை சமேத கைலாச நாத சுவாமி ஆலயம்

தினமணி

கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ள வலங்கைமானிலிருந்து, குடவாசல் செல்லும் பாதையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். 

கும்பகோணத்திலிருந்து குடவாசல், ஓகை வழியாகக் கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி வரலாம். குடவாசலில் இருந்து செல்லூர் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த ஆலயம் 2.5.2013 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பெற்றுப் புதுப்பொலிவுடன் விளங்குகிறது.

செல்லூரில் உள்ள குணாம்பிகை சமேத கைலாச நாத சுவாமி ஆலயம் தொன்மையானதும் தரிசிக்க வேண்டுவதும் ஆகும். பிராகாரத்தில் எங்கு நோக்கினாலும் நந்தியாவட்டை மரங்கள் பூத்துக் குலுங்குவதைக் காணலாம். 

தனது கலைகளை இழந்த சந்திரன் இங்கு வழிபட்டு, மீண்டும் அக்கலைகளைப் பெற்றான்.சந்திரனும் சூரியனும் வழிபட்ட புவன பைரவ மூர்த்தி சக்தி வாய்ந்தவர். வேண்டிய வரம் யாவும் தருபவர். 

அகத்தியர் நட்சத்திர சூக்த மந்திரத்தினை ஓதி வழிபட்ட தலம்.

மேலும் நாகநாதர், சட்டைநாதர் ஆகிய லிங்கமூர்த்திகளின் சன்னதிகள், மூலஸ்தான கைலாசநாதர் கோயிலின் இருபுறமும் அமைந்துள்ளன. 

கிழக்கு நோக்கிய பெரும் கோயில், எதிரில் குளம் ஒன்றும் உள்ளது.

கிழக்கு மேற்கு என இரு வழிகள் உள்ளன. கிழக்கில் சுதைகள் வாயிலை அலங்கரிக்கின்றன. உள்ளே நுழைந்தவுடன் ஒருபுறம் நவசக்தி விநாயகரும், ஒருபுறம் சாமிநாத சாமி எனும் பெயரில் தனித்த முருகனும் மாடங்களில் உள்ளனர். 

அதனை கடந்து சென்றால் கைலாசநாதர் கருவறைக்கு செல்லும் வழியின் வலது புறம் தனி கோயிலாக சட்டநாதர் – திரிபுரசுந்தரி சன்னதி உள்ளது, இடது புறம் நாகநாதர் சன்னதி. இடைவிடாது சித்தர்கள் வழிபடும் புண்ணிய மூர்த்தியாக கைலாசநாதர் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியவளாகக் குணாம்பிகையும் அருட்காட்சி வழங்குகின்றனர்

கைலாசநாதர் அழகிய லிங்க ஸ்வரூபியாக வாவென்கிறார். அருகில் தெற்கு நோக்கிய சன்னதியில் குணாம்பிகை, இவர் தம்பதிகளின் இடையே உள்ள பிணக்குகளை நீக்கும் தன்மை கொண்டவர், இவரை தம்பதி சமேதராக வழிபட்டால் குணாம்பிகை உங்களுக்கு கோயில் கொள்வாள். உள்ளம் கோயிலானால் அக் குடும்பத்தின் தன்மை பற்றி சொல்லத்தான் வேண்டுமா? 

பிரகாரமெங்கும் வண்ணப்பூங்கா எண்ணிலடங்கா வண்ணம் காட்டுகின்றன, தென்மேற்கில் விநாயகர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார், இவர் வலம்புரிக்காரர், கேட்டதை கேட்டவண்ணம் தந்தருள்வார்.

கருவறை நேர் பின்புறம் மேற்கு வாயில் அமைந்தள்ளது. அதனை ஒட்டி நீண்ட மண்டபத்தில் ஏழு லிங்கங்கள் வன்மீக நாதர், அகஸ்தீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், காலஹஸ்தீஸ்வரர், கெளதமேஸ்வரர், ரிணவிமோசனர் சொக்கநாதர் மற்றும் முத்துமாரி (தற்கால இடைச்செருகலாக இருக்கலாம்) 

அடுத்துள்ள சிற்றாலயம் தன்னில் முருகன் தன் இரு மனைவியருடன் உள்ளார். மகாலட்சுமி சன்னதியும் உள்ளது. வழமைபோல் சண்டேஸ்வரர் கோமுகத்திற்கருகில் உள்ளார். வடகிழக்கில் இரு பைரவர்கள், சூரியன், சனி சந்திரன் ஆகியோர் உள்ளனர். இதன் எதிரில் தனி மண்டபத்தில் நவகிரகங்கள் உள்ளன. 

பாடல் பெற்ற திருக்களம்பூர் என்றழைக்கப்படும் திருக்கொள்ளம்பூதூரின் மிக அருகில் இருப்பதால் இக்கோயிலும் பாடல் பெற்றிருக்க கூடும் இக்காலத்திற்கு தேவையானவற்றினை மட்டும் வைத்தோம் என ஈசன் கூறியதால், இக்கோயில் பதிகங்களும் அதில் அழிந்துபட்டிருக்கலாம். 

சற்றேறக்குறைய ஆயிரம் வருடங்களுக்கு சமமான தொன்மை கொண்ட கோயில். கைமேல் பலன் தரும் கயிலாசனார் வேறென்ன வேண்டும்.



கட்டுரையாக்கம்: கடம்பூர் விஜயன் - 763960605

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT