ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் புதன்கிழமை நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம். 
செய்திகள்

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்: பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் புதன்கிழமை சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சந்தனக்கூட்டை மலர்தூவி வரவேற்றனர்.

DIN

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் புதன்கிழமை சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சந்தனக்கூட்டை மலர்தூவி வரவேற்றனர்.
கடந்த 3 -ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மதியம் ஏர்வாடி தர்காவிலிருந்து யானை மற்றும் குதிரைகள் ஊர்வலத்துடன் போர்வை எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏர்வாடியில் உள்ள நல்ல இப்ராஹிம் மகாலுக்கு வந்து சேர்ந்ததும், அங்கு சந்தனம் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
யாதவரும், முத்தரையர் சமூகத்தினரும் சந்தனக்கூட்டினை தயாரித்து எடுத்து வந்த பிறகு, புதன்கிழமை அதிகாலையில் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்பாக மேளதாளங்களுடன் யானை மற்றும் குதிரைகள் வந்தன. ஊர்வலத்தில் ஆதிதிராவிட சமூகத்தினர் புத்தாடைகள் அணிந்து, தீப்பந்தங்கள் மற்றும் பிறைக்கொடியை ஏந்தியவாறு வந்தனர்.வழி நெடுகிலும் பெண்கள் குலவையிட்டபடி வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சந்தனக்கூட்டினை மலர்தூவி வரவேற்றனர். வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஏர்வாடி தர்காவை வந்து சேர்ந்தது. அங்கு தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் சந்தனத்தை பூசினர். அதன் பின்னர் போர்வை போர்த்தப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் சந்தனம் வழங்கப்பட்டது.
விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார். விழாவில் கீழக்கரை சமூகப்பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கே.எம்.தமீம்ராஜா, மாவட்ட ஹாஜி சலாஹூதீன், முன்னாள் தர்கா கமிட்டி நிர்வாகிகள் அம்ஜத்ஹூசைன், துல்கருணை பாட்சா, செய்யது பாரூக் ஆலிம் அருஸி, சிராஜூதீன் மற்றும் ஹக்தார்கள் மற்றும் வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையரும், பணி ஓய்வு பெற்ற நீதிபதியுமான தேவதாஸ், ஆணையரின் உதவியாளர் தமிழரசு ஆகியோர் தலைமையில் ஹக்தார்கள் செய்திருந்தனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன. ராமநாதபுரம் ஏடிஎஸ்பி எஸ்.வெள்ளத்துரை தலைமையில்,கீழக்கரை டிஎஸ்பி பாலாஜி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT