செய்திகள்

பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்

DIN

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கற்பக விநாயகர் திருக்கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா, ஆகஸ்ட் 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்ற விழாவில், 2 ஆம் திருநாள் முதல் 8 ஆம் திருநாள் வரை காலை வெள்ளி கேடகத்தில் மூஷிக வாகனத்தில் சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.
ஐந்தாம் திருநாள் கஜமுஹாசூர சம்ஹாரமும், 9 ஆம் திருநாளான ஆகஸ்ட் 24 இல் திருத்தேரோட்டமும், அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பத்தாம் திருநாளான வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தியன்று காலை 9.30 மணிக்கு விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் குளக்கரை எதிரே எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து, குளக்கரையில் அங்குச தேவருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. 
பின்னர், பிச்சைக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அங்குசதேவர் மூன்று முறை குளத்தில் மூழ்கி எழுந்தார். தொடர்ந்து, உற்சவர் விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.
அதையடுத்து, பிற்பகல் 2 மணிக்கு விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக, பச்சரிசி, வெள்ளம், கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, எள்ளு உள்ளிட்டவைகளைக் கொண்டு 8 ஆம் திருநாள் முதல் 10 ஆம் திருநாள் வரை தயாரிக்கப்பட்ட 18 படி கொண்ட மிகப்பெரிய கொழுக்கட்டை, மூலவர் கற்பக விநாயகருக்கு படைக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு, பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் நச்சாந்துபட்டி அழ. பெரியகருப்பன் செட்டியார் மற்றும் காரைக்குடி ராம. நாராயணன் என்ற மாதவன் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர். மேலும், இப்பெருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT