செய்திகள்

ஆடிப்பூர புரசைவாரி உற்சவம்: மலையப்பர் ஊஞ்சல் சேவை

DIN

திருமலையில் ஆடிப்பூர புரசைவாரி தோட்ட உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சாமி புதன்கிழமை இரவு ஊஞ்சல் சேவை கண்டருளினார்.
ஏழுமலையான் கோயிலுக்கு புஷ்ப கைங்கரியம் செய்வதற்காக திருமலையில் வைணவ மகா குரு ராமானுஜர் நந்தவனத்தை ஏற்படுத்த விரும்பி, அதற்கான பொறுப்பை அனந்தாழ்வாரிடம் ஒப்படைத்திருந்தார்.
அனந்தாழ்வார் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியின் உதவியுடன் நந்தவனத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவரது மனைவிக்கு மயக்கம் ஏற்பட்டது. ஏழுமலையான் சிறுவன் உருக் கொண்டு வந்து அவரது மனைவிக்கு உதவி புரிந்தார்.
இதனைக்கண்டு கோபமடைந்த அனந்தாழ்வார், தன் கையில் இருந்த மண்வெட்டியால் சிறுவனை தாக்கியதில் முகவாயில் வெட்டு விழுந்தது.
தன் தவறை உணர்ந்த அனந்தாழ்வார் ஏழுமலையானிடம் முறையிட கோயிலுக்குச் சென்றார்.
அங்கு மூலவர் சிலையின் முகவாயிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அனந்தாழ்வார், சிறுவன் உருக்கொண்டு வந்தது ஏழுமலையான் என்பதை அறிந்து தான் தவறு செய்து விட்டதாக மன்னிப்புக் கோரினார். ஏழுமலையானின் முகவாயில் பச்சை கற்பூரத்தை வைத்து அழுத்தினார். உடனே ரத்தம் வடிவது நின்று விட்டது. அன்று முதல் ஏழுமலையான் முகவாயில் பச்சை கற்பூரம் சாற்றுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.
இச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆடிப் பூரத்தன்று திருமலையில் புரசைவாரி தோட்ட உற்சவம் தேவஸ்தானம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஆடிப் பூரத்தை முன்னிட்டு புதன்கிழமை மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை முடிந்தவுடன் தங்கப் பல்லக்கில் புரசைவாரி தோட்டத்துக்கு சென்றார்.
இதையொட்டி அனந்தாழ்வாரின் பிருந்தாவனம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு உற்சவ மூர்த்திகள் ஊஞ்சல் சேவை கண்டருளினர். அன்னமாச்சார்யா திட்டத்தைச் சேர்ந்தவர்கள் பக்தி பாடல்களை பாடினர். விழாவில் திரளான பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT