செய்திகள்

சபரிமலை ஐயப்பன் தரிசன முன்பதிவு: ஜனவரி 19 வரை நீட்டிப்பு

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான இணையவழி முன்பதிவு தேதி ஜனவரி 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்தாண்டு மண்டல பூஜையின் போது சுவாமி தரிசனம் செய்வதற்கான இணையவழி முன்பதிவு அக்டோபர் மாதம் தொடங்கியது. 
முதலில் நவம்பர் 16- ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது மகரவிளக்கு பூஜை தேதிகளிலும் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக ஜனவரி 19 ஆம் தேதி வரை இணையவழி முன்பதிவு மேற்கொண்டு ஐயப்பனை தரிசிக்கலாம். அதற்கு www.sabarimalaq.com  என்ற இணயதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலபூஜை புதன்கிழமை தொடங்குகிறது. எனவே நவம்பர் 16- ஆம் தேதி காலை 5 மணி முதல் நடை திறக்கப்பட்டு, டிசம்பர் 23-ஆம் தேதி மூடப்படும். இதைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் கோயில் நடை டிசம்பர் 31- ஆம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 19 ஆம் தேதி இவ்வாண்டுக்கான பூஜைகள் நிறைவடைந்து நடை சாத்தப்படும். 
லட்சக்கணக்கான பக்தர்கள்: மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை நடக்கும் மாதங்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்குவார்கள். 
பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக கேரள காவல்துறை சார்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தரிசனத்துக்காக இலவசமாக இணையதளத்தில் முன்பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 
இணையதளம்: ஐயப்ப பக்தர்கள் www.sabarimalaq.com  என்ற இணையதளத்துக்குச் சென்று தங்கள் பெயர், முகவரியோடு, புகைப்படத்தையும் விர்ச்சுவல் கியூ கூப்பன் திட்டத்தில் பதிவேற்றம் செய்து, பின்னர் செல்ல விரும்பும் தேதி, எந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யப் போகிறீர்கள் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடன் ஏதாவது ஓர் அசல் அடையாள அட்டை, பதிவிறக்கம் செய்யப்பட்ட கூப்பன் ஆகியவற்றுடன் பம்பை செல்ல வேண்டும்.
பக்தர்கள் கொண்டு செல்லும் கூப்பன், அடையாள அட்டையைப் பரிசோதித்த பிறகு பம்பையில் இருந்து மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 
2016- ஆம் ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை காலங்களில் இணையதள வசதியைப் பயன்படுத்தி 22 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT