செய்திகள்

தசரா: விழாக் கோலம் பூண்டது மைசூரு

DIN

உலகப் புகழ் வாய்ந்த வரலாற்று சிறப்பு மிகு மைசூரு தசரா விழாவை வியாழக்கிழமை கன்னட எழுத்தாளர் நிசார் அகமது தொடக்கி வைத்தார்.
407-ஆம் ஆண்டாக மைசூரில் வியாழக்கிழமை சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் காலை 8.45 மணிக்கு துலா லக்னத்தில் சிறப்பு பூஜை செய்து தசரா விழா தொடக்கி வைக்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.டி.தேவெ கெளடா தலைமையில் நடைபெற்ற விழாவில், முதல்வர் சித்தராமையா, பொதுப் பணித் துறை அமைச்சர் மகாதேவப்பா, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தன்வீர்சேட், கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் உமாஸ்ரீ, இந்து அறநிலையத் துறையின் ருத்ரப்பா மானப்பா லமானி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
முதல்வர் பங்கேற்பு
சிறப்பு பூஜைக்கு பிறகு சாமுண்டி மலையில் காவல் உதவி மையம், பைனாகுலர் வசதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை முதல்வர் சித்தராமையா தொடக்கி வைத்தார். மேலும், சாமுண்டி மலையில் நடக்கும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் அவர் ஆய்வுசெய்தார். 
அதன்பிறகு, அரண்மனை வளாகத்தில் மாலை 6 மணிக்கு தசரா கலை விழாவை சித்தராமையா தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இசை விற்பன்னர்களுக்கு மாநில இசை விற்பன்னர் விருதுகள் வழங்கப்பட்டன.
விழாக் கோலம்
தசரா திருவிழாவை முன்னிட்டு, மைசூரில் அமைந்துள்ள அரண்மனை, மிருகக்காட்சி சாலை, சாமுண்டீஸ்வரி கோயில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிருஷ்ணராஜ சாகர் அணை, பிருந்தாவன் தோட்டம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 
தெருவெங்கும் உற்சாகம் பொங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளை தவிர, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் தசரா திருவிழாவை காண மைசூரில் குவிந்தனர். மைசூரு மாநகரம் ஒளி வெள்ளத்தில் மின்னிக் கொண்டிருந்தது.
வண்ணமயமான விழாக்கள்
தசரா திருவிழாவை முன்னிட்டு, மைசூரில் உள்ள பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை கிராமியக் கலை விழா, திரைப்பட விழா, உணவு விழா, விவசாயிகள் விழா, யோகா விழா, நாட்டிய நடன விழா, இளைஞர் விழா, சிறுவர் விழா, மகளிர்விழா, இசை விழா, நடன விழா, தோட்டக்கலை விழா, தெரு விழா, மலர் கண்காட்சி, பொருள்காட்சி, நூல் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், பளுதூக்கும் போட்டி, குஸ்தி போட்டி, சாகச நிகழ்ச்சிகள், பொருள்காட்சி, கன்னட மற்றும் உருது கவியரங்கங்கள், 3டி காட்சி விழா போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை துறை சார்ந்த அமைச்சர்கள் உமாஸ்ரீ, கிருஷ்ண பைரே கெளடா, யூ.டி.காதர், தன்வீர்சேட், பிரமோத் மத்வராஜ் உள்ளிட்டோர் தொடக்கிவைத்தனர். 
வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்து, தங்கும் வசதிகள் செய்யபட்டுள்ளன. தசரா திருவிழா செப்.30-ஆம் தேதி யானை ஊர்வலத்துடன் நிறைவடையவுள்ளது. 
தனியார் தர்பார்
மைசூரு மன்னர் உடையார் குடும்ப மரபுப்படி, தசரா திருவிழாவின்போது முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், வெளிநாட்டு அரசர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் தனியார் தர்பார் (அரசவை) நடத்துவது வழக்கம். அந்த வழக்கம் கடந்த பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மன்னர்முறை ஒழிக்கப்பட்டாலும், தசரா திருவிழாவின்போது மன்னர் குடும்பத்தின் வாரிசுகள் தனியார் தர்பார் நடத்தும் மரபை தவறாமல் பின்பற்றி வருகிறார்கள். 
அதன்படி, மைசூரில் உள்ள அரண்மனையில் வியாழக்கிழமை தசரா திருவிழாவை முன்னிட்டு, உடையார் மன்னர் குடும்பத்து பட்டத்து இளவரசர் யதுவீர்கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தனியார் தர்பார் நடத்தினார். 
மன்னர் குடும்பத்தின் பாரம்பரியத்தின்படி தங்க சிம்மாசனத்தில் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் அமர்ந்திருந்திருக்க தனியார் தர்பார் நடந்தது. இதுதவிர, யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கு அவரது மனைவியும் பட்டத்து இளவரசியுமான திரிஷிகா குமாரி தேவி பாதபூஜை செய்து வழிபட்டார். அடுத்த 10 நாள்களுக்கும் அரண்மனையில் வெவ்வேறு வகையான பூஜைகள் நடக்கவிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT