செய்திகள்

திருமலை பிரம்மோற்சவ 3-ஆம் நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

DIN

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை காலை மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். 
ஏழுமலையானுக்கு கடந்த சனிக்கிழமை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதன் 3-ஆம் நாளான திங்கள்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை சிம்ம வாகன சேவை நடைபெற்றது. கர்ஜிக்கும் சிம்மத்தின் மேல் யோக நரசிம்மர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்தார்.
சிம்ம வாகனத் தத்துவம்: சிம்மம் காட்டுக்கு ராஜா. நான் விலங்குகளில் சிம்மம் என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். விஷ்ணு சகஸ்ரநாமத்திலும் 'சிம்மஹ' என்று பாராயணம் செய்யப்படுகிறது. அதனால் மகா விஷ்ணு தன் நான்காவது அவதாரத்தை சிம்ம அவதாரமாக கொண்டார். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்ட நரசிம்ம அவதாரத்தை மகா விஷ்ணு எடுத்தார். சிம்மம் போன்ற பலத்துடன் உள்ள எம்பெருமானை பக்தி செய்யும்போது, அவர் நமக்கு நிச்சயம் அருள்வார் என்பது சிம்ம வாகன சேவையின் தத்துவம். அதனால் யோக நரசிம்மராக சிம்ம வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்த மலையப்ப சுவாமியை கூடியிருந்த பக்தர்கள் வழிபட்டனர். 
ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, மாடவீதியில் பவனி வந்த களைப்பை போக்க, திங்கள்கிழமை மதியம் வசந்த மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெற்றது. 
ஊஞ்சல் சேவை: திருமஞ்சனம் முடிந்த பின்னர், இரவு வாகன சேவைக்கு தயாரான மலையப்ப சுவாமி, மாலையில், அலங்காரத்துடன் ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள சகஸ்ரதீபாலங்கார மண்டபத்தில் 1,008 விளக்குகளுக்கு இடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் ஊஞ்சல் சேவை கண்டருளினர். 
அப்போது, இசைக் கலைஞர்கள் அன்னமாச்சார்யா கீர்த்தனைகள், வெங்கமாம்பா கீர்த்தனைகள் உள்ளிட்டவற்றை பாடினர். 
முத்துப்பந்தல் வாகன சேவை:
பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் தன் உபயநாச்சியார்களுடன் மலையப்ப சுவாமி வலம் வந்தார். கடலிலிருந்து பெறப்படும் செல்வங்களுள் ஒன்று முத்து. தூய்மையானது, குளுமையை தருவது. ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனின் ரூபமாக முத்து கருதப்படுகிறது. மழைத்துளிகள் சிப்பிக்குள் விழுந்து முத்தாக மாறுகிறது. 
அவ்வாறு பக்தர்கள் தங்கள் மனம் என்னும் சிப்பிக்குள் ஆன்மிகம் என்னும் மழைத்துளியை விதையாக விதைத்தால், அது முத்து என்ற பக்தி பாவத்தை நம்மிடம் உண்டாக்கும். அந்த தத்துவத்தை உலகுக்கு உணர்த்த எம்பெருமான் முத்தால் செய்யப்பட்ட வாகனத்தில் மாடவீதியில் வலம் வருகிறார். முத்துப் பந்தல் வாகனத்தில் திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் 11 மணி வரை கஜேந்திர மோட்ச அவதாரத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதியில் வலம் வந்தார்.
வாகன சேவையின் முன்புறம் திருமலை ஜீயர் குழாம் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாடியபடி சென்றனர். வாகன சேவையின் பின்புறம் கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT