செய்திகள்

திருமலையில் தேரோட்டம் கோலாகலம்

தினமணி

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8}ஆம் நாளான சனிக்கிழமை காலை திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
ஏழுமலையான் கோயிலில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 23) முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி, விமரிசையாக நடைபெற்று வருகிறது. 
7}ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை சூரியபிரபையில் சூரிய நாராயணராக செந்நிற மாலை அணிந்து மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
அதேநாள் இரவு குளிர்ந்த ஒளிக்கிரணங்களை கொண்ட சந்திரபிரபை வாகனத்தில் வெண்ணிற மாலை அணிந்து கையில் வெண்ணெய் குடம் ஏந்தி, ஸ்ரீகிருஷ்ணராக மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்தார்.
பிரம்மோற்சவத்தின் 8}ஆம் நாளான சனிக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை திருமலையில் திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதற்காக 32 அடி உயரமுள்ள திருத்தேர் மிக அழகாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி, மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா, கோவிந்தா' என முழக்கமிட்டபடி திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
திருமஞ்சனம்: மலையப்ப சுவாமிக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. 
திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் பால், தயிர், தேன், பழரசம், மூலிகை கலந்த வெந்நீர், மஞ்சள், சந்தனம், துளசி மாலை உள்ளிட்டவற்றால் உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. 
ஊஞ்சல் சேவை: இதைத்தொடர்ந்து, எம்பெருமான் அலங்கரிக்கப்பட்டு, சகஸ்ரதீபங்களுக்கு இடையில் ஊஞ்சல் சேவை கண்டருளினார். அப்போது இசைக் கலைஞர்கள் பக்திப் பாடல்களை பாடினர். வேதபண்டிதர்கள் வேதபாராயணம் செய்தனர்.
குதிரை வாகனம்: இரவு, குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் ராஜ வேடத்தில் மாடவீதியில் வலம் வந்தார். வாகன சேவையின் முன்புறம் திருமலை ஜீயர் குழாம் நாலாயிரத் திவ்யபிரபந்தங்களை பாடியபடி சென்றனர். வாகன சேவையின் பின்புறம் பல்வேறு கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT