திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் தொடக்கம்
திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
திருமலையில் ஆண்டுதோறும் கோடைக்காலம் தொடங்கிய பின், உற்சவ மூர்த்திகளின் உடல் வெப்பத்தைத் தணிக்க தேவஸ்தானம் ஆண்டுதோறும் பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, வருடாந்திர வசந்தோற்சவத்தை நடத்தி வருகிறது.
அதன்படி, வியாழக்கிழமை திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் கோலாகலமாக தொடங்கியது.
3 நாள்கள் தொடர்ந்து நடைபெற உள்ள இந்த வசந்தோற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை மதியம் ஏழுமலையான் கோயில் மேற்கு மாட வீதியில் உள்ள வசந்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு வசந்தோற்சவம் நடைபெற்றது.
இதற்காக உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஏழுமலையான் கோயிலிருந்து வசந்த மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களை சிம்மாசனத்தில் அமர வைத்து பால், தயிர், தேன், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களை திருமலை பெரிய ஜீயர் எடுத்துத்தர, தலைமை அர்ச்சகர் ரமணதீட்சிதர் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினார்.
அதன்பின், உற்சவ மூர்த்திகளை அலங்கரித்து அவர்களுக்கு ஆரத்தி சமர்ப்பித்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வசந்தோற்சவத்தையொட்டி, வசந்த மண்டபம் விலங்குகளுடன் கூடிய வனம் போல் பழங்கள், மலர்கள், காய்கறிகள், மின் விளக்குகள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டது.
வசந்தோற்சவத்தையொட்டி, தினசரி நடைபெறும் பல்வேறு ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.