திருவள்ளூரில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிலுவைப்பாதை ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, திருவள்ளூர்-பூந்தமல்லி சாலையில் பெந்தோகொஸ்தே தேவாலயம், ஈக்காடு சாலையில் சி.எஸ்.ஐ. ஆகிய தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
புனித வெள்ளியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சாம்பல் தினம் முதல் தொடர்ந்து 40 நாள்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு அனுசரித்து வந்தனர். இதைத் தொடர்ந்து புனித வெள்ளியன்று (மார்ச் 30) கிறிஸ்தவர்கள் முழு நோன்பு இருந்து சிறப்பு பிரார்த்தனையும் வழிபாடும் செய்தனர். இதையொட்டி சிலுவையை சுமந்தவாறு உள்ள இயேசுவின் உருவச்சிலையை கிறிஸ்தவர்கள் ஆலயத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது கிறிஸ்தவ பாடல்களை இசைத்தவாறு சென்றனர்.
இதையடுத்து கிறிஸ்தவர்கள் சிலுவையில் முத்தமிட்டு பாத வழிபாடு செய்து பசிப்பிணி போக்க காணிக்கையும் வழங்கினர்.
இதேபோல், திருவள்ளூர் பகுதியில் புதுச்சத்திரம், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், ஜமீன்கொரட்டூர், வெங்கல், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், கடம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.