முகப்பு
செய்திகள்

கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: தர்ப்பணம் செய்ய வந்த பக்தர்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக, மகாளய அமாவசையை முன்னிட்டு அக்குளக்கரைக்கு 

Updated On : 9 அக்டோபர் 2018, 2:35 am IST
பகிர்:


ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக, மகாளய அமாவசையை முன்னிட்டு அக்குளக்கரைக்கு தர்ப்பணம் செய்ய வந்த பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர். 
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பழமைவாய்ந்த ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ராமாநுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்நிலையில் ராமாநுஜர் கோயிலுக்குச் சொந்தமான உள்ள அனந்தசரஸ் திருக்குளம் உள்ளது. 
இக்குளத்தில் குளித்து விட்டு ராமாநுஜரை வணங்கினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் இந்தக் கோயில் குளத்தை கோயில் நிர்வாகத்தினர் முறையாக பராமரிப்பு செய்யாததால், குளத்தில் இருந்த மீன்கள் கடந்த சில நாள்களாக இறந்து குளத்தில் மிதந்து வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. 
இந்த நிலையில், மகாளய அமாவாசை தினமான திங்கள்கிழமை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவதற்காக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ராமாநுஜர் கோயிலுக்கு சொந்தமான அனந்த சரஸ் குளக்கரையில் குவிந்தனர்.
குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் வரும் துர்நாற்றத்தால் தர்ப்பணம் செய்ய வந்த அவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறடுத்த கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.