மகாளய அமாவாசை: கோயில் குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் குளக்கரையில் முன்னோர்களுக்கு
மகாளய அமாவாசையையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் குளக்கரையில் முன்னோர்களுக்கு திங்கள்கிழமை தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக வீரராகவப் பெருமாள் திருக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் அமாவாசை தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கமாகும்.
இந்நிலையில், திங்கள்கிழமை மகாளய அமாவாசை தினம் என்பதால், அதற்கு முன்னதாகவே பக்தர்கள் திருக்கோயில் வளாகத்தில் குவிந்தனர். அவர்கள் திங்கள்கிழமை அதிகாலை முதல் குளக்கரையில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதைத் தொடர்ந்து, கோயிலுக்குச் சென்று வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் புண்ணியமும், முன்னோர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆந்திரம் ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அதோடு, தீராத நோய்கள் தீரவும், தடைபட்ட திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வீரராகவப் பெருமாளை வழிபட ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர்.
காஞ்சிபுரத்தில்...
மகாளய அமாவாசையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில் குளங்களில் ஏராளமான பக்தர்கள் திங்கள்கிழமையன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மகாளய அமாவாசை நாளில் மறைந்த மூதாதையர்கள் தங்களது சந்ததியினரின் வேண்டுதல், வழிபாடுகள் ஆகியவற்றை ஏற்க பூவுலகிற்கு வருகின்றனர் என்பது ஐதீகம். அதன்படி, மறைந்த முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுக்கத் தவறியிருந்தாலும், மாத அமாவாசை விரதம் கடைப்பிடிக்காமல் இருந்தாலும், ஆடி, தை, புரட்டாசி ஆகிய தமிழ் மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
இதையொட்டி, ஆண்டுதோறும் வரும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையன்று, கடல், ஆறு, குளம் ஆகிய நீர்நிலைகளில் இந்துக்கள் நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவர்.
அவ்வகையில், மகாளய அமாவாசை தினமான திங்கள்கிழமையன்று காஞ்சிபுரத்தில் உள்ள சர்வ தீர்த்தக் குளம், கச்சபேஸ்வரர் குளம், தாயார் அம்மன் குளம், திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில் குளம் , பாலாறு ஆற்றோடை ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதேபோல், முன்னோர்களை நினைத்து அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, அவர்கள் விரும்பி சாப்பிட்டு வந்த உணவுப் பொருள்களை படையலிட்டு வழிபட்டனர்.
மாமல்லபுரம் கடற்கரையில்...
மகாளய அமாவாசை தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரை, செங்கல்பட்டு கோதண்டராமர் கோயில் குளம் உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இதனையடுத்து ஏழைகள் முதல் வசதி படைத்தவர்கள் வரை தங்கள் வசதிக்கேற்றபபடி கோயில்கள், கோயில் குளங்கள் ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்யக் குவிந்தனர்.
வேதம் படித்தவர்கள், வேத விற்பன்னர்கள் உள்ளிட்டோர் மக்களிடம் தட்சணை பெற்று முன்னோர்களுக்காக வேத மந்திரங்களைக் கூறி தர்ப்பணம் செய்துவைத்தனர்.
குறிப்பாக ஆறு, கடல் பகுதிகளுக்கு அருகில் தர்ப்பணம் செய்வது சிறப்பாக கருதப்படுவதால் மாமல்லபுரம் கடற்கரையிலும், தலசயனப் பெருமாள் கோயில் குளத்திலும் தர்ப்பணம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திங்கள்கிழமை காலை முதல் மதியம் வரை கடற்கரைப் பகுதியில் திதி கொடுக்க வந்தவர்களைப் பார்க்க முடிந்தது.
இதேபோல் திருப்போரூர் கந்தசாமி கோயில் குளமான சரவணப் பொய்கை, செங்கல்பட்டு கோதண்டராமர் கோயில் குளம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சங்குதீர்த்தக் குளம் உள்ளிட்டவற்றிலும், கோயில்களிலும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.
இதேபோல், பித்ரு தோஷ நிவர்த்திக்கான கோயிலாக விளங்கக் கூடிய செங்கல்பட்டை அடுத்த நெம்மேலியில் உள்ள லட்சுமிநாராயணர் கோயிலில் சம்பத் பட்டாச்சாரியார் தலைமையில் 3 ஆயித்துக்கும் மேற்பட்டோருக்கு தர்ப்பணம் செய்து வைத்தனர். 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் இதில் ஈடுபட்டனர். இதனிடையே, மகாளய அமாவாசை நாளையொட்டி, இக்கோயிலில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஏரிகாத்த ராமர் கோயில்...
மகாளய அமாவாசை தினத்தையொட்டி, மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் குளத்தில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
புரட்டாசி அமாவாசையை மகாளய அமாவாசையாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் முன்னோர்களை நினைவுகூரும் வகையில் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில், கடப்பேரி வெண்காட்டீஸ்வரர் கோயில் ஆகியவற்றின் குளங்களில் பக்தர்கள் தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர். பின்னர் அருகில் உள்ள பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் ஆகியவற்றை வழங்கி வணங்கினர்.