செய்திகள்

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாள்: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி; 4 லட்சம் பக்தர்கள் தரிசனம்

தினமணி

திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்தபோது சுமார் 4 லட்சம் பக்தர்கள் அவரை தரிசித்தனர்.
 ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின்போது பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த புதன்கிழமை இவ்விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் 5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் மலையப்ப சுவாமி, தாயாரின் அவதாரமான மோகினி அவதாரத்தில் கையில் வெண்ணை உருண்டை ஏந்திய கிருஷ்ணசுவாமி உடன் வர, மாடவீதியில் வலம் வந்தார்.
 பல்லக்கில் மோகினி அவதாரத்தில் வந்த மலையப்ப சுவாமியை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர். தாயாரின் அவதாரம் என்பதால் வாகனச் சேவை கோயிலுக்குள் இருந்து தொடங்கியது. அதன்பின் கோயிலுக்குள் உற்சவர்களுக்கு சாத்துமுறை, கொலு, ஆஸ்தானம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின் மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்த களைப்பைப் போக்க, அவருக்கு பல்வேறு அபிஷேகப் பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
 பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பழரசம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களை திருமலை ஜீயர்கள் எடுத்துத்தர அர்ச்சகர்கள் உற்சவர்களுக்கு அபிஷேகத்தை நடத்தினர். அதன் பின் உற்சவர்களுக்கு நிவேதனம் சமர்ப்பித்து அவர்களுக்கு அலங்காரம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சகஸ்ர தீபாலங்கார மண்டபத்தில் 1008 விளக்குகளுக்கு இடையில் மலையப்ப சுவாமி ஊஞ்சல் சேவை கண்டருளினார். அப்போது இசைக் கலைஞர்கள் பக்திப் பாடல்களையும், அன்னமாச்சாரிய கீர்த்தனைகனையும் பாடினர்.
 அதன்பின் இரவு 7 மணிக்கு கருட வாகனச் சேவை தொடங்கியது. தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை தரிசிக்க 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர்.
 வாகனச் சேவை அருகில் வந்தபோது பக்தர்கள் பழங்களைச் சமர்ப்பித்து கற்பூர ஆரத்தி எடுத்தனர். கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய, நவரத்தினங்களால் ஆன ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன.
 இந்த நிகழ்வில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வாகனச் சேவைகளின்போது மோகினி அவதாரம் மற்றும் கருட வாகனத்தின் படம் அச்சிடப்பட்ட அஞ்சல் உறைகளை அதிகாரிகள் வெளியிட்டனர். வாகனச் சேவைக்கு முன்னால், நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடியபடி திருமலை ஜீயர் குழாம் செல்ல, வாகனச் சேவைக்குப் பின்னால் நாடெங்கிலும் இருந்து வந்திருந்த கலைக் குழுவினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT