செய்திகள்

ஒரே சமயத்தில் பல்லாயிரம் லிங்கங்களைப் பூஜித்த பலன் கிடைக்க வேண்டுமா? 

தினமணி

மகா வில்லாளி அர்ஜுனனுக்கு தன்னைவிடச் சிறப்பாக சிவபூஜை செய்பவர், சிறப்பான லிங்கத்தை வைத்துப் பூஜிப்பவர் யாருமில்லை என ஒரு கர்வம் கொண்டிருந்தான். அதனை அறிந்த கண்ணன் உன்னைவிட அதிகமான லிங்கங்களை வைத்து சிவபூஜை செய்யும் தம்பதியினர் இதே ஊரில் இருக்கின்றனர். அதனால் உன்னைவிட அவர்களே சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள் எனக் கண்ணன் சொல்கிறார். 

யார் என அர்ஜுனன் கேட்க ஒரு குடியானவரையும் அவர் மனைவியையும் காட்டுகிறார். அர்ஜுனன் அக்குடியானவருக்குத் தெரியாமல் காலை முதல் இரவு வரை அவரது நடவடிக்கைகளைப் பார்க்கிறான். ஆனால், சிவபூஜையே அவர் செய்யவில்லை, திரும்ப கண்ணனிடம் வருகிறான். நடந்தவற்றைச் சொல்லி அவர்கள் சிவபூஜையே செய்யவில்லை, சிவலிங்கமே அவர்கள் வீட்டில் இல்லை, ஒருமுறை சேர்ந்து நின்று சாதம் வடித்த பானையை கும்பிட்டனர் அவ்வளவு தான் என கூறுகிறான். 

அப்போது கண்ணன், உலக ஜீவராசிகள் பசிப்பிணி தீர்க்கப் பொன்மணி தேவையா அரிசிமணி தேவையா எனக் கேட்க, அர்ஜுனனும் அரிசிதான் பொன்னைவிட உயர்வானது. அதனால் தான் அரிசியும் சிவனும் ஒன்னு எனப் பழமொழியே வந்தது என்கிறான்.

கண்ணனும் அப்படியென்றால் ஒரு அன்ன பருக்கை ஒரு லிங்கத்திற்குச் சமம் தானே? ஒரு பானை நிறைய சாதம் வடித்தபின் அதனை வணங்கினால் பல ஆயிரம் லிங்கங்களை வணங்கியதற்குச் சமம் தானே அதனால் ஒரே சமயத்தில் பல ஆயிரம் லிங்கங்களை வைத்துப் பூஜித்த அவரே சிறந்த சிவபக்தர் என்கிறார் கண்ணன். 

எந்த லிங்கத்தையும் விட அன்னத்தில் லிங்கம் பிடித்து வைத்துப் பூஜித்தால் பலன் அதிகம். அதனால் நித்தம் வீட்டில் சாதம் வெண்கலப் பானையிலோ, குக்கரிலோ வடித்தபின் அதற்கு ஒரு விபூதி பட்டையிட்டு திலகமும் சிறிது பூவும் வைத்து, முடிந்தால் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் இரண்டை வைத்து கிழக்கு நோக்கி நின்று தம்பதிகளாக வணங்கினால் இம்மை, மறுமை இரண்டிலும் இறைவன் அருள் பெற்று வாழ்வாங்கு வாழலாம். 

அதிலும் அன்னாபிஷேக மாதமான ஐப்பசியில் இதனை செய்வோர் எல்லா நலன்களும் பெற்று வாழ்வார்கள் என்பது திண்ணம். 

இந்தாண்டு சிவாலயங்களில் அன்னவார்ப்பு (அன்னாபிஷேகம்) 24.10.2018 புதன்கிழமை அன்று மாலை நடைபெறும். 

- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT