செய்திகள்

திருவண்ணாமலையில் 5 லட்சம் பக்தர்கள் கிரிவலம்

DIN


திருவண்ணாமலையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பெளர்ணமியையொட்டி, திங்கள்கிழமை கிரிவலம் வந்தனர்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பெளர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமியை வழிபடுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத பெளர்ணமியையொட்டி, கிரிவலம் செல்ல உகந்த நேரம் திங்கள்கிழமை காலை 6.59 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 8.59 மணி வரை என கோயில் நிர்வாகம் அறிவித்தது.
இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.
கட்டண தரிசனம், பொது தரிசனம் ஆகியவற்றில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து தரிசிக்கும் நிலை ஏற்பட்டது. பெளர்ணமியையொட்டி, சிறப்புத் தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டன.
இதனிடையே, திங்கள்கிழமை காலை 6.59 மணிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம் தொடங்கியதால், முற்பகலில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர். மாலை 6 மணி அளவில் கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இரவு முழுவதும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமியை வழிபட்டனர். கிரிவலத்தை முன்னிட்டு, நகருக்கு வெளியே 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தின் முக்கிய நகரங்கள், வெளிமாநிலங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 
மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT