செய்திகள்

கேது கிரகத்தின் உண்மை ஸ்வரூபமும் மற்ற கிரகங்களின் கூட்டால் அளிக்கும் பலன்களும்!

நவக்கிரகங்களில், மற்ற கிரகங்களை விட கேது, ஒரு குழப்பமான மற்றும் ரகசியமான மனப்பாங்கை..

ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்

1. நவக்கிரகங்களில், மற்ற கிரகங்களை விட கேது, ஒரு குழப்பமான மற்றும் ரகசியமான மனப்பாங்கை அளிக்கும் கிரகமாகும். அதோடு கேது, செவ்வாய் கிரகத்துடன் இணைந்திருப்பின், ஒரு போர்க்களத்தில் எப்படி வெற்றி பெறுவோம் என்பதனையும், எப்படி ஒரு பொருளைப் பார்ப்போம் என்பதனையும் காண முடியும். இவர்கள் இருவரும் பயணிப்பது பற்றிக் கூறவேண்டுமானால், பகவான் கிருஷ்ணர் கையில் உள்ள சுதர்சன சக்கரம் என்பதே சரியான உதாரணம். செவ்வாய் சுதர்சன சக்கரமே என்றால், கேது அந்த சுதர்சன சக்கரத்தின் செயல்பாடு ஆகும். 

2. செவ்வாய், கேதுவின் இணைவில்:- செவ்வாயின் உச்சக்கட்ட குணம் என்றால் எப்படிப்பட்ட எதிரியாக இருப்பினும் அவர்களை வீழ்ச்சி அடையச் செய்வதே ஆகும். இந்தசெவ்வாய், கேது இணைவைக் கொண்ட ஜாதகர்கள், சாத்தியமற்ற பணிகளைச் சாதிப்பதில் வல்லவர்கள். அனைத்தையும் பெரிய அளவில் எதிர்பார்ப்பவர்கள். ஆனால், இவர்கள், தனது சக்தியை நெறிப்படுத்தி வைக்க வேண்டும். இல்லையேல், இவர்கள் ஒரு பெரிய குற்றவாளி ஆவதற்கோ அல்லது முற்றும் துறந்த துறவி ஆவதற்கோ, இவ்வாறு இரு எதிர் முனைகளில் மிகவும் தீவிரம் காட்ட முயலுவார்கள். இது அந்தந்த ஜாதகத்தில் உள்ள செவ்வாய், கேது அமரும் இடம், ராசி, சாரம் மற்றும் பலவகைகளைக் கொண்டு முடிவு செய்தல் வேண்டும். எனவே இந்த அமைப்பிற்கு குருவின் பார்வையோ அல்லது சுபர்களின் பார்வையோ இருப்பது நிச்சயமாகிறது. 

3. ஒரு ஜாதகத்தில் இவ்விரு கிரகங்களின் கூட்டமைப்பு இருந்து, அவைகளிடையே ஆன பாகைகள் மிக நெருக்கமாக இருப்பின், அந்த ஜாதகரின் குணத்தைக் கடவுள் தான் அறிவார் எனலாம். அவர்களின் கோபம் எரிமலையைப் போன்று இருக்கும். அது எப்போது அமைதி அடையும் என்றால் அந்த எரிமலை எப்போது குளிர்கிறதோ அப்போது தான். இப்படி அமையப்பெற்ற ஜாதகர்கள், தனது மிக நெருக்கம் மற்றும் அன்பு செலுத்தும் நபர்களிடம் முதலில் சண்டை பிடித்து, பின்னர் 15-20 நிமிட நேரத்திற்குப் பின்பு அவர்களிடம் சென்று மன்னிப்பு கோருவது இவர்களின் வழக்கம். இவர்கள் குளிர்ச்சி அடைந்த பிறகு பார்த்தால், இவர்களை விட அதிகமாக நேசிப்பவர்கள் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டார்கள் என்றே கூறத்தோன்றும்.

4. இக்கட்டுரையைப் படிக்கும் அனைவருக்கும் கூறுவது என்னவென்றால், இவர்களை நேசியுங்கள், அவர்களுக்கு எந்த தீங்கும் தெரியாமல்கூட செய்துவிடாதீர்கள், ஏன் எனில், இவர்கள் தாம் பாதிப்புக்கு ஏற்பட்டுவிட்டோம் தம்மைக் காயப்படுத்திவிட்டார்கள் எனத் தெரிந்ததும் அவர்கள் எந்த தீவிர முடிவுக்கும் செல்வார்கள். இப்படிப்பட்ட செவ்வாய், கேது இணைவைக் கொண்ட ஜாதகர்கள், நமது உறவிலோ, நண்பர்களாகவோ, ஏன் காதலர்களாகவோ மற்றும் உள்ள அனைத்து பந்தங்களில் இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு எந்த துன்பமும் நேராமல் பாதுகாப்பது மனித நேயம் மட்டும் அல்லாமல் நமது கடமையும் ஆகும். அவர்களுக்குப் பிடித்த பொருளை எடுக்க முயற்சிக்க வேண்டாம். உங்களை அழச் செய்துவிடுவார்கள், ஏனெனில் அவர்கள் தமக்குப் பிடித்த பொருளை மிகவும் நேசிப்பார்கள். அவர்களுக்கு பிடித்த பொருளோ, நண்பர்களோ, உறவினர்களோ மற்றும் அவர்கள் நேசிப்பதை இழந்தால், குறைந்தது 10 நாட்களாவது அழுது தீர்த்துவிடுவார்கள். 

5. செவ்வாய் கேது இணைவுள்ளவர்கள், உப்பு, சர்க்கரை அதிகம் எடுத்துக்கொள்வார்கள் மற்றும் தமது உணவில் அதிக புளிப்பு சுவையை சேர்க்க ஆசைப்படுவார்கள். ஒரு குடும்பத்தில் உள்ள மற்றவர்களைக்காட்டிலும் உப்பை அதிகமாகச் சேர்த்துக் கொள்பவர்கள் இந்த அமைப்பைக் கொண்ட ஜாதகர்களாகவே இருப்பார்கள். இவர்கள் தக்காளி சாஸ் அதிகம் விரும்புவார்கள். எல்லா  உணவு வகைகளிலும் இது இல்லாமல் உண்ண, விரும்பமாட்டார்கள் அல்லது இருக்கச் செய்வார்கள். செவ்வாய், கேது இணைவைக் கொண்ட இவர்கள், கேரம், சதுரங்க விளையாட்டை மிக அருமையாக விளையாடுவார்கள். 

6. கேது மற்றும் சூரியன் இணைவைக் கொண்டவர்கள்:- இந்த இணைவைக் கொண்ட ஜாதகர்கள், மற்றவர்களைச் சார்ந்து வாழ்வார்கள். இவர்களின் தந்தை, பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். கண்ணில் பிரச்னை உள்ளவராக இருப்பர் மற்றும் ஏதேனும் ஒரு விபத்தில் கண்ணில் காயம் ஏற்படவும் வாய்ப்பு. வலுவிழந்த எலும்புகளைக் கொண்டிருப்பார்கள். அரசு வகையிலோ அல்லது இவரின் தந்தையுடனோ ஏதேனும் ஒரு பிரச்னை எதிர்கொள்ளவேண்டி வரும். பித்ரு தோஷம் கொண்ட அமைப்பைக் கொண்ட இந்த ஜாதகர்கள், மகாராஷ்டிராவில் உள்ள திரியம்பகேஸ்வர் ஆலயத்தை ஒரு முறையாவது வழிபட்டு வருவது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். 

7. கேது மற்றும் சந்திரன் இணைவைக் கொண்டவர்கள்:- இந்த அமைப்பைக் கொண்டவர்கள், மிகுந்த பதற்றம் கொண்டவர்களாகவும் ஒற்றைத் தலைவலி பாதிப்புக்கும் உள்ளவர்கள். இந்த ஜாதகரின் தாயாருக்கும் சிறு சிறு நோய்கள் தாக்கும் படியாக இருக்கலாம். மிக அபாயகரமான சூழ்நிலைகளில் ஜாதகர் சிக்க வாய்ப்புண்டு. ஆனால் அவர்கள் அதிலிருந்து வெளிவருவர். இப்படிப்பட்ட ஜாதகர்கள் வெளிநாட்டில் தான் தமது வாழ்க்கையைத் துவங்குவர். இவர்களுக்கு சில சந்தர்ப்பங்களில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு / மனநிலை ஏற்படும். இவர்களின் தாயார் இவர்களை ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார்கள். 

8. கேது மற்றும் செவ்வாய் இணைவைக் கொண்டவர்கள்:- இந்த இணைவுள்ள இளம் சிறார்கள், சிலர் சீரியஸ் உடல் நோய் வாய்ப்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலும், ரத்தம் மற்றும் தோல் நோய் தாக்க வாய்ப்புள்ளது ஏதேனும் ஒரு விபத்தில், உடல் உறுப்புக்களில் ஒன்றை இழக்கவோ / பாதிப்படையவோ நேரிடலாம். இந்த ஜாதகர்களுக்கு, வீட்டுச் சொத்து சம்பந்தமான பிரச்னைகள் தோன்றலாம். இந்த ஜாதகரின் சகோதரர் வேலையற்று இருப்பார் அதனால், இந்த ஜாதகரே இரு குடும்பத்தினருக்கும் உணவளித்து, நிர்வகிக்க நேரிடும். சொத்து சம்பந்தமான வழக்குகள் உண்டு. 

9. கேது மற்றும் புதன் இணைவைக் கொண்டவர்கள்:- திக்கு வாய் ஏற்படும் புத்திசாலிகள் ஆனால், இவர்களின் புத்திசாலித்தனம் தக்க சமயத்தில் தேவை ஏற்படும் காலம் இவர்களுக்கு உதவாது. இவர்களின் உறவினர்களே, இவர்களை சரியாக நடத்தமாட்டார்கள். நீதிமன்ற வழக்குகள் இவர்களுக்கு இருக்கலாம்.

10. கேது மற்றும் குரு இணைவைக் கொண்டவர்கள்:- பிரச்னைகளை உருவாக்குபவர்கள் வாக்குவாதம் புரிபவர்கள் மற்றும் இவர்களுக்கு, நிறைய உணர்ச்சி வசப்பட வேண்டிய சூழல் உருவாகும். உச்சகட்ட மதிப்பீட்டாளர்கள் இவர்களை நாடுபவர்களுக்கு மரியாதையை அளிப்பர். மோக்ஷம் அடைய வேண்டும் என்கிற எண்ணம் மனதில் இருக்கும்.

11. கேது மற்றும் சுக்கிரன் இணைவைக் கொண்டவர்கள்:- பெண்களால் பிரச்னைகள் ஏற்படும் பணம் சேமிப்பது சிரமம் இனிப்பு வகை பானங்களால் ஆபத்து ஏற்படும். உடல் சுகம் அதிகம் எதிர்பார்ப்பவர்கள், அதனால் உடலில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர். 

12. கேது மற்றும் சனி இணைவைக் கொண்டவர்கள்:- வேலையில் அல்லது செய்தொழிலில் பிரச்னைகள் எதிர்கொள்ள வேண்டிவரும். இளவயதில் பல பிரச்னைகள் இருந்திருக்கும் மற்றும் அவர் நன்னடத்தை கொண்டு இருக்க மாட்டார். காரணம் இன்றியே வேலையை மாற்றுவதும், வேலையில் இருந்து விலகுவதுமான பழக்கத்தில் இருப்பார். 

13. கேது மற்றும் மாந்தி இணைவைக் கொண்டவர்கள்:- நன்மைகளை விட தீமைகளே அதிகம் சுயநலமே பிரதானமாகக் கருதி செயலில் ஈடுபடுவர். தாரமாயினும், தனயனாகினாலும், தாயாகினாலும் மதி மயக்கி, பாசம், அன்பு, நேசக்கரங்களைச் செயற்கையாகத் தோற்றுவித்து, தருணமறிந்து சொத்துக்களையும், உடைமைகளையும் மற்றும் இதர தேவைகளையும், வெட்கம் மற்றும் ஈவு இரக்கமின்றி, எதிர் விளைவுகளையும் சற்றும் பொருட்படுத்தாமல், அபகரித்துக் கொள்வதோடு, நம்பியவர்களை, உற்றவர்களை, கொண்டவர்களை நட்டாற்றில் தள்ளியும் விட்டு மறைந்து விடுவார். 

இந்த வகை அமைப்புள்ள ஜாதகர், பலபேருடைய, அடிவயிற்று சாபத்தைப் பெற்று துர்மரணம் அடைவர். போலி சாமியார்கள், கள்ளத்தொடர்பு கொண்டவர்கள், கள்ளக்கடத்தல், பிளாக்மெயில் செய்தல், ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் இழைத்தல், கொலை மிரட்டல் போன்றவற்றைச் செய்து பலபேரிடம் அடிவயிற்று சாபம் அடைந்து, எதிர்பாராத வகையில் திடீரென துர்மரணம் அடைவர். மேலே கூறப்பட்ட அனைத்து கிரகங்களுடனும் கேது இணைவால் ஏற்படும் குணம் கொண்ட அனைவரையும் நாம் ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த பரந்த உலகில் காண நேரிடலாம். இந்த ஜோதிடக் கட்டுரையால் இப்படிப்பட்ட குணம் எவ்வாறு அமைகிறது என்பதனை அறிவதால், நமது நெருங்கிய உறவினர், நண்பர்களிடம் இருந்து தப்பிக்க வழிவகுக்கும் அல்லது நமக்கே இப்படிப்பட்ட குணம் இருப்பினும் அதனை சிறிது சிறிதாகக் களையச் செய்யலாம். 

- ஜோதிட ரத்னா தையூர் சி.வே.லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT