செய்திகள்

கலையழகு மிக்க காஞ்சிபுரம் கல்யாண மண்டபத்தில் அத்திவரதர்!

DIN

தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் விளங்குகிறது. வேகவதி ஆற்றின் கரையில் அமைந்து சிறந்த கோயில் நகரமாகத் திகழ்கிறது.  நகரேஷீ காஞ்சி - நகரங்களில் சிறந்தது என காளிதாசரால் புகழ்ந்து போற்றப்படுகிறது. 

காஞ்சிபுரம் நகரில் சின்னக் காஞ்சிபுரம் எனப்படும் பகுதியில் சிறந்த வைணவத்தலமாக வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் 'அத்திகிரி' எனப்படுகிறது.  பல்லவ, சோழ, விஜய நகர மன்னர்கள் பெரும் தொண்டு செய்துள்ளனர். 

விஜயநகர மன்னர்கள் காலத்தில் கல்யாண மண்டபம், துலாபார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் போன்றவை இக்கோயிலில் நிர்மாணிக்கப்பட்டன. இக்கோயிலின் மேற்கு  கோபுரவாயிலைக் கடந்தவுடன் இடது புறத்தில் அத்திவரதர் பள்ளிகொள்ளும் 'அனந்த தீர்த்தம்' என்ற திருக்குளம் அமைந்துள்ளது. அதன் அருகே உள்ள 'நூற்றுக்கால்  கல்யாணமண்டபம்' ஒரு அரிய கலைக்கருவூலமாகத் திகழ்கிறது. 

இம்மண்டபத்தின் வெளிப்புறத்தூண்களில் குதிரை மீது அமர்ந்த கோலத்தில் வீரர்கள் மற்றும் மன்மதன் - கிளி மீது அமர்ந்த ரதிதேவியின் சிற்பங்கள் அரிய கலைப்  படைப்பாய் விளங்குகிறது. 

மண்டபத்தின் கொடுங்கைப் பகுதியிலிருந்து தொங்கும் ஒரே கல்லினால் ஆன 'கல்சங்கிலி' வியப்பை அளிக்கிறது. மண்டபத்தின் நடுவே பெருமாள் எழுந்தருளும் மண்டபம்  உள்ளது. இங்கு பெருமாள் நவராத்திரித் திருவிழா, வைகாசி பிரம்மோத்சவம், சித்திரை மாதம் ஆகிய நாட்களில் எழுந்தருளுகிறார். 

மண்டபத்தின் ஒவ்வொரு தூணும் ஒரு அரிய கலைப் படைப்புதான். திருமாலின் பல்வேறு வடிவங்கள், நடராஜப் பெருமானைப் போன்று நடனமாடும் கோலத்தில் திருமால்,  பல கரங்களுடன் காட்சிதரும், சக்கரத்தாழ்வார் நரசிம்மரின் பல வடிவங்கள் போன்ற அழகிய சிற்ப வடிவங்களைக் காணலாம்.

காஞ்சிவரதர்

பிரம்மா நடத்திய அசுவமேத யாகத்தில் இருந்து காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அனைவருக்கும் வேண்டிய வரங்களை  அளித்ததால் காஞ்சிவரதர் என அழைக்கப்பட்டார். ஒரு சித்திரை மாதம் சதுர்த்தியில் அஸ்தம் நட்சத்திரத்தில் பெருமாள் காட்சி அளித்தார். அதேநாளில் பிரம்மதேவர்  பெருமாளின் திருவடிவத்தை அத்திமரத்தில் சிலையாக வடித்து வழிபட்டார். 

அத்திவரதர் யாகத்திலிருந்து தோன்றியதை வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் சிற்ப வடிவமாகக் காணமுடிகிறது. இம்மண்டபத்தூண் ஒன்றில்  அத்திவரதரைக் காணலாம். சங்கு, சக்கரம் தாங்கி வலதுகரம் அபயமுத்திரையும், இடது கரம் கதையின் மீது வைத்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவர்  யாகத்திலிருந்து தோன்றியதற்கு அடையாளமாக அவரது பின்புறத்தில் தீச்சுவாலைக் காட்டப்பட்டுள்ளது. அத்திவரதரின் புராண வரலாற்றை இங்கே காணமுடிகிறது. 

நின்ற கோலத்தில் அருள்புரியும் அத்திவரதரைக் காணச் செல்லும் பொழுது கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்புரியும் அத்திவரதரையும் கண்டு மகிழுங்கள்!

- கி.ஸ்ரீதரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT