செய்திகள்

மயிலுக்குத் தோகையில் கண் போன்ற அமைப்பு வந்தது எப்படித் தெரியுமா?

கோவை பாலகிருஷ்ணன்

மயில் தோகை விரித்தாடும் அழகைப் பார்க்கவே பரவசமாக இருக்கும். நம் வீட்டிற்கு முன் நின்று கரையும் காகங்களுக்கு உணவளித்தால் நம் முன்னோர்களுக்கு அன்னமளிப்பதற்குச் சமம். புராணங்களில் அன்னப்பறவையின் அறிவு மிகவும் போற்றப்படுகின்றது. 

ஓணான், சாதாரணமாகத் தங்க நிறத்தில் தோன்றும். ஸ்ரீவால்மீகி ராமாயணம் உத்தரகாண்டத்தில் மேற்கூறிய இப்பிராணிகளுக்கு எவ்வாறு தனித்தன்மை வாய்த்தது என்பதற்கான விளக்கம் உள்ளது. மருத்தன் என்ற அரசர் உசிரபீஜம் என்ற இடத்தில் ஒரு யாகம் நடத்தினார். தேவகுரு பிரகஸ்பதியின் சகோதரர் சம்வர்த்தர் யாகத்தை நடத்த உதவினார். அப்போது ராவணன் அங்கே வந்தான்.

அவனது அபரிமிதமான பலத்தாலும், பிரம்மாவினால் வழங்கப்பட்ட வரங்களாலும் அவனைக் கண்டு பயந்த தேவர்கள் தங்கள் சொந்த உருவங்களை மறைத்துக் கொண்டு வேறு உருவங்களை எடுத்தனர். இந்திரன் மயில் ஆனான்; யமன் காகம் ஆனான்; குபேரன் ஓணான் ஆனான்; வருணன் அன்னம் ஆனான். 

அப்போது ராவணன் ஓர் அசுத்தமான நாய் போல யாகம் நடந்த பஞ்சவடிக்குள் நுழைந்தான். ராவண: ப்ராவிசத் யக்ஞம் ஸாரமேய இவா சுசி: என்றார் வால்மீகி.

மருத்தனிடம் ராவணன் சென்று அவரைத் தன்னுடன் போரிட அழைத்தான். மருத்தன் அவனை யார் என்று கேட்டார். ராவணன் திமிராக, உன் அறியாமையைக் கண்டு வியப்பாக உள்ளது. அரசே, நான் குபேரனின் சகோதரன். அவனை வென்று நான் இந்தப் புஷ்பக விமானத்தைக் கைப்பற்றினேன் என்றான்.

அரசனோ, ஓ! மூத்த சகோதரனையே போரில் வென்றவனா நீ? இதுவரை நான் உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. ஏ கொடுமதியானே! எனது அம்புகளால் உன்னை யமனிடம் அனுப்புகிறேன், பார் என்றார். 

மிகுந்த கோபத்துடன் வில்லேந்தி ராவணனை எதிர்க்கக் கிளம்பினார் மருத்தன். உடனே சம்வர்த்தர் சொன்னார்: அரசே! நான் கூறுவதைக் கேள். மகேஷ்வரனைக் குறித்துச் செய்யப்படும் இந்த யாகத்தை அரைகுறையாக விட்டால் உனது வம்சமே அழிந்துவிடும். யாக தீட்சை எடுத்துக் கொண்டவர் போர் புரிவது தகாது. கோபம் கொள்வதும் தகாது. போரில் வெற்றியடைவதும் நிச்சயமல்ல. மேலும் ராவணனைப் போரில் வெல்வது மிகவும் சிரமமானது.

மருத்தன் அந்த அறிவுரையை ஏற்று, யாகம் செய்வதில் முனைந்தார். உடனே ராவணனின் மந்திரி சுகன், ராவணன் வென்றான் என்று கொக்கரிக்க, ராவணனும் அங்கிருந்து அகன்றான். அவன் சென்ற பிறகு இந்திராதி தேவர்கள் தங்கள் சுய உருவங்களை அடைந்தார்கள். அப்போது இந்திரன் மயிலிடம், உனக்குப் பாம்புகளால் பயம் ஏற்படாது. 

உன் நீல நிறத்தோகையில் என் ஆயிரம் கண்கள் போன்றதொரு தோற்றம் ஏற்படும். மேகமூட்டத்தின்போது நீ தோகையை விரித்து அழகாக ஆடுவாய் என வரம் தந்தார். 

வரத்தைப் பெற்ற மயில் கூட்டங்கள் மகிழ்ந்தன. அங்கிருந்த காகத்திடம் யமன், காகமே! நீ எனக்கு மிகவும் திருப்தி தந்துள்ளார். பிற உயிர்களைப் பாதிக்கும் நோய்கள் உன்னை வருத்தாது. உன்னை மக்களும் கொல்லமாட்டார்கள். 

நீ மாந்தர்களால் அளிக்கப்படும் உணவைச் சாப்பிட்டால், அதன் விளைவாக பித்ரு லோகத்திலுள்ள பித்ருக்கள் பசிப்பிணி நீங்குவார்கள் என்றார். அடுத்து, வருண பகவான் அன்னத்திடம், அன்னமே! இனி பூரண சந்திரனை ஒத்ததாக உனது மேனி விளங்கும். உன்னைக் காணும் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும். நல்ல வெண்மையான நுரையைப் போலத் தனித்தன்மையுடன் நீ விளங்குவாய். 

எனது சரீரமான நீருடன் நீ இணையும் போது உன் மகிழ்ச்சி ஈடு இணையற்றதாகும் என வரமளித்தார். (இந்த வரம் கிடைப்பதற்கு முன்பு அன்னப்பட்சிகள் வெள்ளை நிறமாக இல்லை. அவற்றின் இறக்கைகளின் நுனி கருமையாகவும், அவற்றின் மார்புப் புறம் கருமை கலந்த பழுப்பு நிறமாகவும் இருந்ததாம்.) ஒரு பாறையின் மேலிருந்து ஓணானிடம் குபேரன், ஓணானே, இனி உன் உனது கருமை நிறம் மாறிப் பொன் நிறமாகவும் மாறும் என்றார். இவ்வாறு தேவர்கள் வரம் அருளியதால் இப்பிராணிகளுக்குத் தனித்தன்மை வாய்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

ஆன்மீக வாழ்க்கைக்குப் புராணங்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

- கோவை பாலகிருஷ்ணன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT