செய்திகள்

துரதிர்ஷ்டம் யாருக்கு நேரும்? அவற்றை முன்கூட்டியே அறிய முடியுமா?

ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்

மேற்படி சொன்ன அத்தனையும் பாரம்பரிய ஜோதிட முறையில் D-30 எனும் த்ரிம்சாம்ச சக்கரத்தை பயன்படுத்தி அறியலாம். இந்த D-30, த்ரிம்சாம்சம் சக்கரத்தைப் பற்றி பராசரரும், வராஹமிஹிரரும், கல்யாணவர்மரும் தெளிவுபடுத்துவது யாதெனின், மேற்படி பலன்களை லக்கினத்தைக் கொண்டும், சந்திர லக்கினத்தைக் கொண்டும் (ராசி) இதில் எது பலமாக உள்ளதோ, அதனை தொடர்புப் படுத்திபார்த்தல் அவசியம் என கூறுவர். பிற்காலத்தில் வந்த மிகப்பெரிய ஜோதிட விற்பன்னர் B.சூரியநாராயண ராவ், அவர்கள் தமது ஸ்த்ரீ ஜாதகம் எனும் நூலில், பெண்களின் தீய நடத்தைப் பற்றி இந்த சக்கரம் மூலம் தெள்ளத் தெளிவாக காணலாம் என்பதனை விவரித்துள்ளார். இந்த கட்டுரையில் கூறப்படும் தகவல்கள் ஒரு சிலவே. ஆர்வம் உள்ளவர்கள், மீதமுள்ள அனைத்தையும் கற்க ஆசைப்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 

ஒரு ராசியை, 30 பகுதிகளாகப் பிரித்தால், அதற்கு, த்ரிம்சாம்சம் என்று பெயர். த்ரிம்சம் = 30, அம்சம் அதில் ஒரு பகுதி என்பதே இதன் விளக்கம் ஆகும். இது ஏறத்தாழ ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 6-ம் பாவ / வீட்டு பலன்களைப் போல் தான் அமைந்தாலும், இந்த சக்கரம் மூலம் மிக துல்லியமானப் பலன்களை அறியமுடியும் மேலும் எடுத்துரைக்க முடியும். இந்த த்ரிம்சாம்சம் சக்கரத்தை இரண்டு பிரிவாக பிரித்துதான் பலன்களை காண இயலும். ஒன்று, முதலில் கணக்கீடு பகுதி, அடுத்தது பலன்கள் காணும் பகுதி. 

கணக்கீட்டுப் பகுதி -1:

பொதுவாக ராசிகளை ஒற்றைப் படை  (ஆண் ) ராசி என்றும் இரட்டைப் படை (பெண்) ராசி என்றும் பிரிக்கலாம். இதனைப் பயன்படுத்தியே கீழ்க் கண்டவாறு த்ரிம்சாம்ச சக்கரத்தைப் பிரிக்கலாம். அரச கிரகங்களான சூரியன், சந்திரன் ஆகியவற்றிற்கு, இந்த த்ரிம்சாம்சத்தில் இடம் இல்லை. அதேபோல சாயா கிரகங்களான ராகு, கேதுக்களுக்கும் இங்கு இடம் இல்லை. காலபுருஷ தத்துவப்படி, ஆண் / ஒற்றைப்படை ராசிகளான 1, 3, 7, 9, 11 (5 - சிம்மம் -சூரியன் நீங்கலாக) இவை முறையே நெருப்பு, வாயு, இந்திரன், குபேரன், மற்றும் ஜலம் ராசிகளாக பாவித்து, பாகைகள் 0-5 வரை மேஷம் - நெருப்பு த்ரிம்சாம்சம் என்றும் முறையே 6-10 வரை கும்பம் - வாயு; 11-18 தனுசு - இந்திரன் ; 19-25 வரை மிதுனம் - குபேரர் . 26-30 வரை - துலாம்- ஜலம் என்றும் பிரித்து பலன் காண வேண்டி வரும். 

 கணக்கீ ட்டு பகுதி - 2  :

பலன் காணும் பகுதி - 1

(மிக நீளமான ஒன்று பொறுமை காத்து படிக்கவும் )

ஜாதகத்தின் நிலைகளும், அதன் பலன்களையும் பார்ப்போம்..

1. D-1 சக்கரத்தின் லக்கினாதிபதியும், D-30 சக்கரத்தின் லக்கினாதிபதியும் நட்பு பெற்று நண்பர்களானால் ..

மிகவும் சிறப்பு. அந்த ஜாதகர், தனது வாழ்வில் எந்த ஒரு துன்பத்தையும் பெரிதாக அனுபவிக்க மாட்டார். எல்லாவித பழக்கங்களையும் அறிந்து வைத்திருப்பதால், ஜாதகரை எந்த வித தொல்லையும் சாராது. 

2. D-30 சக்கரத்தின் லக்கினாதிபதி, D-1 சக்கரத்தின் லக்கினத்தில் 6, 8ஆம் வீட்டுடன் தொடர்பு கொண்டால்..    

இந்த தொடர்பு கூடாது. அந்த ஜாதகர், சொல்லில் அடங்காத துன்பத்தை அடைவார் . மேலும் இயற்க்கைக்கு மாறான வழியில் அவரது மரணம் சம்பவிக்கும். 

3. D-30 சக்கரத்தின் 6, 8ஆம் அதிபதிகள், D-1 சக்கரத்தில் எங்கு அமர்கிறார்களோ..

அந்த வீட்டு சம்பந்தமான பிரச்சினையை ஏற்படுத்தும். எதிர்பாராத மரணம் சம்பவிக்கும். 2 ஆம் வீட்டில் அமர்ந்தால் தனம் கெடும். 4ஆம் வீட்டில் அமர்ந்தால் சுகம் கெடும், 9 ஆம் வீட்டில் அமர்ந்தால் பாக்கியம் கெடும். இதுபோல் மற்றவற்றிற்கும் கொள்க.

4. D -1 சக்கரத்தின் 6,8 ஆம் அதிபதிகள் , D -30 சக்கரத்தில் 

(i) கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்தால் நன்மையே விளையும் 

(ii) திரிகோணத்தில் சரியான நேரத்தில் பிரச்சினை விளையும் 

(iii) 2, 3, 11 இடங்களில் அமர்ந்தால் எல்லா பிரச்னைகளுக்கும் ஜாதகரே காரணமாவார். வேறு யாரும் காரணமாக மாட்டார்கள். 

(iv) 6, 8, 12 இடங்களில் அமர்ந்தால் மிகவும் மோசமான விளைவுகளை (துரதிர்ஷ்ட்டம், தோல்வி, அறுவை சிகிச்சை, விபத்து, தேவையற்ற பிரச்சினைகள், பெண்ணின் நடத்தையில் கோளாறு) அந்த கிரஹங்களின் தசா காலங்களில் கொடுக்கும். 

5. D-30 சக்கரத்தின் லக்கினாதிபதி, D-30 சக்கரத்திலேயே

(i) கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் நன்மையே விளையும்

(ii) 2, 3, 11 இடங்களில் அமர்ந்தால் மிகவும் பரவாயில்லை

(iii) 6, 8, 12 இடங்களில் அமர்ந்தால்     அதிகப்படியான, மிகவும் மோசமான விளைவுகளை அந்த கிரக தசை காலங்களில் கொடுக்கும். 

6. D-30 சக்கரத்தின் லக்கினாதிபதி D-30 சக்கரத்தில்

(i) சூரியன், சந்திரன், குரு சேர்க்கை பெற்றால் (சத்வ கோனி என்று பெயர்) ஆன்மீக நபராவார். இந்த அமைப்பை பெற்ற ஜாதகர், அன்பு, நேசம், கருணை, அமைதி, பரிதாபம் போன்ற நற்குணங்களைக் கொண்டவாரய் இருப்பார்.

(ii) செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகியோருடன் சேர்க்கை பெற்றால் (ரஜோ கோனி என்று பெயர்) பெருஞ்செல்வந்தராக, மகிழ்ச்சி உடையவராக, பொருள் சம்பந்தமான முன்னேற்றம் உடையவராக இருப்பார்.

(iii) செவ்வாய் மற்றும் சனி ஆகியோருடன் சேர்க்கை பெற்றால் (தமோ கோனி என்று பெயர்) இந்த அமைப்பை பெற்ற ஜாதகர், மிகுந்த மன உளைச்சலுடன், பஞ்சத்தில் வாடியவன் போல், கெட்ட சகவாசம், கெட்ட குணமுடையவனாகவும், பெண் சபலம் கொண்டும் இருப்பான். 

7. D-30 சக்கரத்தின் 8ஆம் அதிபதி D-30 சக்கரத்தில் எங்கு அமர்கிறதோ..

(i) அந்த வீடு சுப கிரஹங்களின் சம்பந்தத்தை பெற்று இருக்குமாயின்  - அமைதியான வாழ்வு, நல்ல செயல், நல்ல மத வழிபாடு, அமைதியான மரணம் போன்ற பலன்கள் ஜாதகருக்கு கிடைக்கும்.

(ii) அந்த வீடு அசுப கிரஹங்களின் சம்பந்தத்தை பெற்று இருக்குமாயின் - அமைதியற்ற வாழ்வு, அதிகப்படியான துன்பங்கள், நீண்டகால நோய், விபத்து போன்றவற்றால் ஜாதகருக்கு மரணம் சம்பவிக்கும். 

8. மேலும் 8ஆம் அதிபதி அமர்ந்திருக்கும் ராசியின் தன்மையை பொறுத்து, ஜாதகரின் மரணம் எப்படி நிகழும்?

(i) நெருப்பு ராசி - கால புருஷ தத்துவப்படி (1 , 5 , 9) - மரணம் நெருப்பின் மூலம் நிகழும் 

(ii) நில ராசி - கால புருஷ தத்துவப்படி (2, 6, 10)  - மரணம் விஷத்தின் மூலம், விஷ கிருமிகள், மிருகங்கள் மூலம் நிகழும்.

(iii) காற்று  ராசி - கால புருஷ தத்துவப்படி (3, 7, 11) - மரணம் உயரத்திலிருந்து / மலையிலிருந்து விழுவது, விபத்து மூலம் நிகழும்.

(iv) நீர் ராசி - கால புருஷ தத்துவப்படி (4, 8, 12) - மரணம் வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் நிகழும் 

9. D-1  சக்கரத்தின் லக்கினாதிபதி, 3, 6, 8, 12 அதிபதிகள் D-30 சக்கரத்தில்..

நல்ல நிலையில் (சுப தன்மைபெற்று) அமர்ந்திருப்பது அவசியம். ஒரு கிரகம் அசுபத் தன்மை பெற்றிருந்தாலும், அது அமர்ந்த வீடு / பாவம் சம்பந்தமான பிரச்னையை ஜாதகர் சந்திக்க வேண்டிவரும். 

10. D-30 சக்கரத்தின் லக்கினாதிபதி தசையில்

D-1 சக்கரத்தில், D-30 லக்கினாதிபதி எங்கு அமர்கிறாரோ, அந்த வீடு / பாவம் சம்பந்தமான பிரச்னையை ஏற்படுத்தும்

11. D-30 சக்கரத்தில், எந்த கிரகம் அதிக அசுபத்தன்மை கொண்டதோ (2, 3, 6, 8, 11) அந்த கிரகம்

D-1 சக்கரத்தில், வலுவுடன் இல்லாமல் இருந்தால் அக்கிரஹத்தின் தசை அதிகப்படியான கெடுப்பலன்களைக் கொடுக்கும்.

D -30 மூலம் ஒரு ஜாதகரின் எதிர்மறை நிகழ்வுகளை மிக துல்லியமாக காண வேண்டியது அவசியம். 

D-30 லக்கினாதிபதி அமர்ந்திருக்கும் வீடும், அதனால் ஏற்படும் பலன்களும்.. 

  • D-1 சக்கரத்தின் லக்கினத்தில் - அமைதியான, சமநிலையான வாழ்க்கை 
     
  • D-1 சக்கரத்தின் இரண்டாம் வீட்டில் - செல்வசெழிப்பான வாழ்க்கை
     
  • D-1 சக்கரத்தின் மூன்றாம் வீட்டில் - தனக்குத்தானே கழ்ட்டங்களையும், தடைகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்
     
  • D-1 சக்கரத்தின் நான்காம் வீட்டில் - எப்போதும் சந்தோஷ மற்ற வாழ்வு, எப்போதும் துணை தேவை
     
  • D-1 சக்கரத்தின் ஐந்தாம் வீட்டில் - தியானம், பரிகாரம் மூலம் தனது பிரச்சினையை , இல்லது செய்ய முடியும்.
     
  • D-1 சக்கரத்தின் ஆறாம் வீட்டில் - சிறை படுதல், அரசுத்துறை சார்ந்த பிரச்சினைகள் (LITIGATION)
     
  • D-1 சக்கரத்தின் ஏழாம் வீட்டில் - ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி / கணவன், வெளித்தொடர்பு, எதிராளியால் திருப்தி இல்லாமை
     
  • D-1 சக்கரத்தின் எட்டாம் வீட்டில் - அரசுத்துறை சார்ந்த பிரச்சினைகள் , அதிக எதிரிகளை உருவாக்குதல், எதிரியால் பயம்.  பயந்தாங்கொள்ளி
     
  • D-1 சக்கரத்தின் ஒன்பதாம்  வீட்டில் - தானம் கொடுத்த்துகொண்டே இருப்பார்
     
  • D -1 சக்கரத்தின் பத்தாம் வீட்டில் - நல்ல செயல், பிரச்சினை இல்லா வாழ்வு
     
  • D-1 சக்கரத்தின் பதினொன்றாம்  வீட்டில் - நண்பர்களுக்கு, உற்றார் உறவினர்களுக்கு, சமூகத்திற்கு உதவுதல். பிரச்னை இல்லா வாழ்வு. பெரிய பிரச்னைகள் ஏதும் வராது
     
  • D-1 சக்கரத்தின் பன்னிரண்டாம் வீட்டில் சிறைபடுதல், அரசு சார்ந்த பிரச்னைகள்

இது அத்தனையும் எனது சொந்த முயற்சி. பல்வேறு நூல்களில் இருந்து படித்துணர்ந்து தயாரிக்கப்பட்டது. இதனை அப்படியே தங்களது போன்று பிரதி செய்து அளிப்பவர்கள் நிச்சயம் துயரத்திற்கு ஆளாவர். இதனை மனதில் கொள்ளவும். முக்கியமாக இந்த சக்கரத்திற்கு அவ்வாறு பலன் தரும், எச்சரிக்கைப் படுத்தவே இதனை கூறவேண்டிய நிலையில் உள்ளேன் .சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொண்டு அறியலாம். சில உதாரண ஜாதகங்களை வெளியிட தயாராக இருந்த போதிலும் கட்டுரையின் நீட்சி காரணமாக வெளியிடவில்லை. மன்னிக்கவும். ஜோதிட பயிற்சியில் உள்ளவர்களுக்கு நிச்சயம் இந்தக் கட்டுரை உதவும் என நம்புகிறேன். இன்னும் பல சக்கரங்களை பற்றி தொகுத்தளிக்க இறைவன் அருளை மற்றும் வாசகர்களின் ஆசியை வேண்டுகிறேன்.சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா  தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு : 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT