முகப்பு
செய்திகள்

திருமலையில் தமிழக அரசின் சார்பில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை: குமரகுரு

திருமலையில் தமிழக அரசின் சார்பில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுப்பேன் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட குமரகுரு தெரிவித்தார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:10 AM
திருமலை ஏழுமலையான் திருவுருவப் படத்தைப் பெற்றுக் கொள்ளும் எம்எல்ஏ குமரகுரு. (உள்படம்) மருத்துவர் நிச்சிதா.
பகிர்:


திருமலையில் தமிழக அரசின் சார்பில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுப்பேன் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட குமரகுரு தெரிவித்தார். 
 ஆந்திர அரசு 36 பேர் கொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே அறங்காவலர் குழுத் தலைவராக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் ஒய்.வி. சுப்பாரெட்டி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற நிலையில், கடந்த சனிக்கிழமை மூன்று உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். 
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் நிச்சிதா, எம்எல்ஏ குமரகுரு, சீனிவாசன் உள்ளிட்ட 3 பேர் உள்பட நியமிக்கப்பட்ட, 17 பேர் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். முன்னதாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஏழுமலையானைத் தரிசித்தனர். அவர்களுக்கு தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி ஏழுமலையான் பிரசாதம், திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை வழங்கினார். 
பின்னர், அவர்களுக்கு ஏழுமலையான் கோயிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதி அருகே செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
 இந்நிலையில், ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர், கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவும், அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு கூறுகையில், சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்எல்ஏவான சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை அறங்காவலர் குழு உறுப்பினராக இங்கு அனுப்பி வைத்துள்ளார். முதல் முறையாக தமிழகத்தில் இருந்து, 5 உறுப்பினர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
 எனவே  ஏழை, எளிய பக்தர்கள் சுலபமாக சாமி தரிசனம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை அறங்காவலர்  குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன். பக்தர்கள் பலர்  தமிழக அரசின் சார்பில் திருமலையில் விருந்தினர் மாளிகை அமைக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளனர். 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்து ஆந்திர மாநில முதல்வருக்கு பரிந்துரை செய்து, தமிழக அரசின் சார்பில் திருமலையில் விருந்தினர் மாளிகை கட்டப்படும், என்றார்.
 திங்கள்கிழமை மதியம் தமிழகத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சேகர் ரெட்டி ஏழுமலையான் கோயிலுக்குள் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →