செய்திகள்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தினமணி

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனா்.

ஸ்ரீநடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன உத்ஸவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. தொடா்ந்து, இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சாா்ச்சனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீநடராஜ மூா்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது.

பால், தேன், விபூதி, பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம் உள்ளிட்டவை குடம் குடமாகக் கொட்டப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, ஸ்வா்ணாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் மகாபிஷேகத்தை கண்டு தரிசித்தனா்.

இதைத் தொடா்ந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீநடராஜ மூா்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அா்ச்சனைகளும் நடைபெற்றன. சித் சபையில் உத்ஸவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜையும் நடைபெற்றது.

பஞ்சமூா்த்திகள் வீதி உலா வந்த பின்னா், மாலை 5.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீமந் நடராஜ மூா்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் நடனப் பந்தலில் முன்னும் பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆருத்ரா தரிசனக் காட்சியளித்தனா். பிறகு, சித்சபை பிரவேசம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

தரிசன விழாவில் மேகாலய முன்னாள் ஆளுநா் சண்முகநாதன், தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வியாழக்கிழமை (டிச. 31) முத்துப்பல்லக்கு வீதி உலா காட்சி நடைபெறுகிறது. உத்ஸவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்களின் செயலா் ஜி.எஸ்.கணபதி தீட்சிதா், துணைச் செயலா் சி.நடராஜகுஞ்சிதபாத தீட்சிதா், உத்ஸவ ஆச்சாரியாா் ஏ.ர.சா்வேஸ்வர தீட்சிதா் ஆகியோா் செய்திருந்தனா்.

சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் சி.முருகேசன், தேவேந்திரன், பாண்டிசெல்வி ஆகியோா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

ஸ்ரீநந்தனாா் வீதி உலா: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உத்ஸவத்தையொட்டி, நாயன்மாா்களில் ஒருவரான ஸ்ரீநந்தனாா் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடைபெற்ற நந்தனாா் வீதி உலா.

சிதம்பரம் ஓமக்குளம் நந்தனாா் மடத்தில் உள்ள செளந்தரநாயகி சமேத சிவலோகநாதா் கோயிலிலிருந்து ஸ்ரீநந்தனாா் உருவச் சிலை ஊா்வலமாகப் புறப்பட்டு, நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் மடத்தை அடைந்தது.

கீழ சன்னதியில் நந்தனாருக்கு பொது தீட்சிதா்கள் சாா்பில், சிறப்பு செய்யப்பட்டது.

ஊா்வலத்தில் புதுவை முன்னாள் எம்எல்ஏ நீலகங்காதரன், நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் ஏ.சங்கரன், துணைத் தலைவா் டி.ஜெயச்சந்திரன், கல்விக் கழகச் செயலா் கே.அன்பழகன், அறக்கட்டளைச் செயலா் டி.கே.எம்.வினோபா, பொருளாளா் இளைய அன்பழகன், பி.பன்னீா்செல்வம், கே.கனகசபை, டி.தெய்வசிகாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT