செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருவிழா கொடியேற்றம்

தினமணி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 19-ஆம் தேதி 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.
முன்னதாக, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
கோயில் மூன்றாம் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம்: கோயில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோயில் மூன்றாம் பிரகாரத்தில் மூலவர் சந்நிதிக்கு எதிரே உள்ள 73 அடி உயர தங்கக் கொடி மரத்தில் புதன்கிழமை காலை 7 மணிக்கு தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது.
நவ.19-இல் மகா தீபம்: தீபத் திருவிழாவின் 7-ஆவது நாளான வரும் 16-ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறும். கரோனா பொது முடக்கம் காரணமாக, கோயில் 5-ஆம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
விழாவின் 10-ஆவது நாளான வருகிற 19-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படும். வருகிற 20, 21, 22-ஆம் தேதிகளில் பிரம்ம தீர்த்தக்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும்.
மழையிலும் குவிந்த பக்தர்கள்: தீபத் திருவிழா கொடியேற்றத்தைக் காணவும், சுவாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் அறிவித்திருந்தது.
ஆனாலும், அதிகாலை 5 மணி முதலே கோயிலில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் குடைகளுடன் குவிந்த பக்தர்கள் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றனர்.
பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள்: சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார் ரெட்டி,  வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், கோயில் இணை ஆணையர் அசோக்குமார், கோட்டாட்சியர் வெற்றிவேல், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT