முகப்பு
செய்திகள்

வைத்தீஸ்வரன்கோயில் தங்க கொடிமர குடமுழுக்கு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் காணிக்கையாக வழங்கிய 5 கிலோ தங்கம் கொண்ட கொடிமரத்துக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் காணிக்கையாக வழங்கிய 5 கிலோ தங்கம் கொண்ட கொடிமரத்துக்கு குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்தின் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசிப்படி, வைத்தியநாதசுவாமி சந்நிதி எதிரே உள்ள கொடிமரத்துக்கு தங்க தகடுகள் பதிக்கும் பணியை தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தர் சேதுராமன் ஏற்றுக்கொண்டு, 5 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கினார். 

இந்த தூய்மையான தங்கத்தை கொடிமரத்தில் பூசும் வகையில், அதை மைக்ரான் அளவு இழைகளாக மாற்றி, தங்கத் தகடுகள் தயாரிக்கும் பணி, தங்க முலாம் பூசும் பணி ஆகியவை 6 கட்டங்களாக 28 நாள்கள் நடைபெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை தங்கத் தகடுகள் (ரேக்குகள்), அடி பகுதி, தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயாரிக்கப்பட்டு கொடிமரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 

Advertisement

தொடர்ந்து, முழுவதுமாக தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதையொட்டி, புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள தாளங்களுடன் புறப்பட்டு கோயிலை வலம்வந்து தங்க கொடிமரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. 
விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு சபாபதி தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தர் சேதுராமன், துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம், தனிஷ்க் உற்பத்தி பிரிவு கோட்ட மேலாளர் இளங்கோவன், தனிஷ்க் தெற்கு பிராந்திய வர்த்தக மேலாளர் நரசிம்மன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்  பண்ணை தி.சொக்கலிங்கம், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சி.பாலு, திமுக மாவட்ட பிரதிநிதி சாமிநாதன், அதிமுக பேரூர் கழகச் செயலாளர் போகர். ரவி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய  சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு சபாபதி தம்பிரான் சுவாமிகள், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தர் சேதுராமன், துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments