மருத்துவக் குறிப்புகளைத் தவிர்ப்போம்!
பலரும் மருத்துவம் படிக்காமலே மருத்துவம், மருத்துவ சிகிச்சைகள் குறித்துப் பேசுவதைப் பற்றி...
உடல் எடையைக் குறைப்பதற்காக இணையம் மற்றும் யூ-டியூப் விடியோக்களைப் பார்த்து சுயமாக சிகிச்சை மேற்கொண்ட கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 'அனரெக்சியா நெர்வோஸோ' என்ற மனநலன் சார்ந்த உணவு, பசியின்மை நோயால் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்த செய்தி வருத்தத்தை தந்தது.
உடல் எடை குறித்த மனநோயான இந்த 'அனரெக்சியா நேர்வோஸோ' என்பது இந்தியாவில் 15 முதல் 19 வயதிலான ஒரு லட்சம் இளம்பெண்களில் 37.5 சதவீதம் பேருக்கு உள்ளதாக மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று இந்த வகை நோயால் கடந்த 2016-ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் சுமார் 55 இளம்பெண்கள் உயிரிழந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 'வெண்காரம்' எனப்படும் வேதிப்பொருளை உட்கொண்டு உயிரிழந்தார்.
Advertisement
'போராக்ஸ்' எனப்படும் இந்த வேதிப்பொருள் பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகள், பீங்கான் தயாரிப்பு மற்றும் சலவைப் பொருள்களில் பயன்படுத்தப்படுவதாகும். மேலும், உடல் இளைப்பதற்காக 'படிகாரம்' உட்கொண்ட கேரள இளம்பெண் உடல் பாதிப்புக்குள்ளானார். படிகாரம் எனப்படுவது 'பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்' எனப்படும் வேதிப்பொருளாகும். இது போன்று இணையத்தைப் பார்த்து பிரசவம் பார்ப்பது, தவறான முறைகளில் உடற்பயிற்சிகள், தியானம், யோகா போன்றவற்றை பலரும் செய்து வருவது இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது.
இன்று இணையத்துக்குள் சென்றாலே எண்ணற்ற மருத்துவக் குறிப்புகள் வருகின்றன. பலரும் மருத்துவம் படிக்காமலே மருத்துவம், மருத்துவ சிகிச்சைகள் குறித்துப் பேசுகின்றனர். இதில் சித்த மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் குறித்து பலர் பேசுவது அதிகமாக உள்ளது.
ஆனால், இது குறித்துப் பேசுபவர்கள், மருத்துவத்தையும், பயிற்சிகளையும் மேற்கொண்டு பலனை அனுபவித்தவர்களா என்பது தெரியவில்லை. எல்லாக் குறிப்புகளையும் தெரிவித்துவிட்டு கடைசியில் தக்க மருத்துவ ஆலோசகர்களின் அறிவுரைப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வாசகத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
இணையவழி மருத்துவ முறைகள், உடற்பயிற்சி முறைகளைப் பயன்படுத்துவர்கள் இந்த வாசகத்தை அலட்சியம் செய்துவிட்டு நேரடியாக செய்முறை பயிற்சியில் இறங்குவதுதான் இத்தகைய விளைவுகளுக்கு முதன்மைக் காரணங்களாக அமைகின்றன. சித்த மருத்துவம், மூலிகை மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவது தவறில்லை. ஒவ்வொரு நோய்க்கும் அதன் தன்மைக்கேற்ப அளவுகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பாடல்கள் வாயிலாக சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் பருமன் குறித்துப் பல்வேறு எதிர்மறையான செய்திகளை மருத்துவ உலகமும் சமூக ஊடகங்களும் பரப்பி வருவதுதான் இதற்கு முக்கியக் காரணமாகும். முதலில் பொதுமக்கள் ஒரு விஷயத்தை உணர வேண்டும். ஒல்லியாக இருப்பவர்கள் எல்லாம் முழுமையான ஆரோக்கியமானவர்களும் அல்லர்; அதிக உடல் எடையுடன் இருப்பவர்கள் ஆரோக்கியமற்றவர்களும் அல்லர். இது அவரவர் குடும்ப மரபு வழி தன்மையாகக்கூட இருக்கலாம்.
அதற்காக உடல் எடையைக் குறைக்க சிலர் கூறும் தேவையற்ற அறிவுரைகளையும், மருத்துவக் குறிப்புகளையும் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். ஊடகங்களில் சிலர் கூறும் அனைத்து மருத்துவ முறைகளின் உண்மைத்தன்மையை யாரும் இதுவரை முழுமையாக அறிந்தது இல்லை. சிலர் புத்தகங்களில் தாங்கள் படித்த ஒருசில விஷயங்களை வைத்துக்கொண்டு அதன் மூலம் பொருள் ஈட்ட முயல்வதே இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணமாகின்றன.
ஒரே மருந்தை காலையில் உட்கொண்டால் ஒரு பலனும், மாலையில் உட்கொண்டால் வேறு பலனும் கிடைக்கும் என சித்த மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. இதையெல்லாம் முறையாக கற்றுத்தேர்ந்த சித்த மருத்துவர்கள் அலலது மூலிகை மருத்துவ நிபுணர்களை நேரடியாக சந்தித்து உரிய தீர்வு பெறுவதே முறையாகும். மாறாக, சமூக ஊடகங்களில் வரும் மருத்துவம் சார்ந்த செய்திகளை முழுமையாக நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போன்றதாகும்.
சமூக ஊடகங்களில் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை மேற்கொள்ள முயற்சிக்கும்போது, அதன் நம்பகத் தன்மையை ஆராய வேண்டும் அல்லது நிபுணர்களை அணுகுவது அவசியம். சமூக ஊடகங்கள் பல நல்ல விஷயங்களையும் நமக்குத் தருகின்றன; அதே நேரத்தில், மருத்துவம் சார்ந்த செய்திகளை உடனடியாக அப்படியே பின்தொடர்வது தவறான ஒன்றாகும்.
உடல் அமைப்புகள் நம் உற்சாகத்தை உயர்த்துவதில்லை. நம்முடைய மனம் சார்ந்த எளிய உணர்வுகளும், உடற்பயிற்சி போன்ற முறைகளே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன. உடல் அமைப்பு என்பது, நமது மூதாதையர்களின் பாரம்பரிய மரபணுக்கள் மற்றும் மரபுவழி தன்மைகளைப் பொருத்தது. அதை தவறான செய்திகள் வாயிலாக நம்மை நாமே சிதைத்துக் கொள்ளக் கூடாது.