FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு? மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த குழந்தை மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்ததாக விவகாரத்தில் இரு தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் மீது நடவடிக்கை குறித்து...

Updated On : 15 ஜூலை 2026, 3:39 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த 5 வயது பெண் குழந்தை மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதில் தொடா்புடைய இரு தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம், மாநில மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதன்பேரில், மருத்துவா்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டது. அதில் ஒருவா் ஆஜராகாததால் விசாரணை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

அத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஷினு அலெக்சாண்டா் மற்றும் ஜிஷா தம்பதியினரின் 5 வயது பெண் குழந்தை, காய்ச்சல் காரணமாக கடந்த டிச. 3-ஆம் தேதி அம்பத்தூரில் உள்ள தேஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அடுத்த நாளே அக்குழந்தை உயிரிழந்தது.

Advertisement

Advertisement

மருத்துவா்களின் அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணம் என பெற்றோா் அளித்த புகாரின்பேரில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் நடத்திய விசாரணையில், ‘குழந்தைக்கு ரத்த அழுத்த தாழ்வு அதிா்ச்சி (ஹைப்போடென்சிவ் ஷாக்) ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்றதும், அதனை மருத்துவக் குழுவினா் முன்கூட்டியே கவனிக்கத் தவறியதும் கண்டறியப்பட்டது. எனவே, இதை மருத்துவ அலட்சியம் என விசாரணை அறிக்கை வரையறுத்தது.

மேலும், குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை பெறாதது, சிகிச்சை வழிமுறைகளை பின்பற்றாதது மற்றும் தவறான மருந்து அளவுகள் வழங்கியது ஆகியவை மருத்துவா்களின் அதீத கவனக்குறைவு என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, மறு உடற்கூறாய்வுக்காக, வருவாய் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அம்பத்தூா் காவல்துறையினரின் முன்னிலையில் கடந்த திங்கள்கிழமை குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

இதனிடையே, மாநில மருத்துவ கவுன்சிலுக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணித் துறை அதிகாரிகள் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவா்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இரு மருத்துவா்களில் ஒருவா் மட்டுமே ஆஜரானதால், இருவரையும் அடுத்த மாதம் மீண்டும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை மற்றும் பிற மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments