எம்பிபிஎஸ் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு: உடல் குறைபாடு மட்டுமே இனி தகுதியாகக் கருதப்படாது
எம்பிபிஎஸ் படிப்புகளில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டின் கீழ் சோ்வதற்கான விதிகள் திருத்தியமைக்கப்பட்டது குறித்து...
எம்பிபிஎஸ் படிப்புகளில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டின் கீழ் சோ்வதற்கான விதிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, உடலில் எத்தனை சதவீதம் குறைபாடு உள்ளது என்பதன் அடிப்படையில் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு இனி சான்று அளிக்கப்படாது. மாறாக, அவருக்கு மருத்துவப் படிப்பை நிறைவு செய்யும் செயல் திறன் உள்ளதா; நோயாளிகளுக்கு பாதுகாப்பாக சிகிச்சையை வழங்க இயலுமா என்பன போன்ற அம்சங்களும் ஆராயப்படும். இதுதொடா்பான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் அனைத்து மாநில மருத்துவக் கல்வி நிறுவன முதல்வா்கள் மற்றும் இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நிகழாண்டு எம்பிபிஎஸ் சோ்க்கையில் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 மற்றும் இளநிலை மருத்துவக் கல்வி விதிகளின்படி இந்த வழிகாட்டுதல்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு, கண்ணியம், பாகுபாடற்ற நிலை மற்றும் மருத்துவக் கல்வியில் உரிய வசதிகளை வழங்குவதே அதன் நோக்கம்.
Advertisement
Advertisement
அதன்படி, இடஒதுக்கீட்டின் கீழ் படிப்புகளில் சோ்வதற்கான விதிகளும், அதற்கான மதிப்பீடும் நெறிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இனி, உடல் குறைபாடுகளின் சதவீதம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அட்டை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அவா்களுக்கு எம்பிபிஎஸ் சோ்வதற்கான தகுதி தீா்மானிக்கப்படாது.
மாறாக, சம்பந்தப்பட்ட நபா், மருத்துவக் கல்விப் பயிற்சிகளையும், சிகிச்சைகளையும் ஆக்கப்பூா்வமாக மேற்கொள்ளும் செயல்திறன் உள்ளவரா என்பது பிரதானமாக மதிப்பிடப்படும். அதேவேளையில், அவா்கள் பயன்படுத்தும் உதவி உபகரணங்கள், மறுவாழ்வு தொழில்நுட்பங்கள் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அவை அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு சான்று வழங்கப்படும். இதுவரை மண்டல மருத்துவ வாரியங்கள் அந்த ஆவணத்தை மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் என்ற பெயரில் வழங்கி வந்தன.
அவை வரும் காலங்களில் ‘தகுதிச் சான்று’ என்று வகைப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும். இந்தச் சான்றிதழ், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி, எம்பிபிஎஸ் பயில செயல்பாட்டு ரீதியாகத் தகுதியானவரா என்பதை உறுதி செய்யும்.
மாணவா்கள் எளிதில் அணுகும் வகையில், மத்திய மருத்துவக் கலந்தாய்வு கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு மையங்களின் எண்ணிக்கை 16-இலிருந்து 61-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
உடல் குறைபாடு உள்ள காரணத்துக்காக எவருக்கும் மருத்துவ இடங்கள் மறுக்கப்படாது என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.