மார்கழி மாதம் என்றாலே, அனைத்துக் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். அந்த வகையில், அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மார்கழி மாதத்தில் மட்டுமே மரகத லிங்க தரிசனத்தை பக்தர்கள் காண முடியும்.
மார்கழி மாதம் பிறந்துவிட்டாலே அனைத்துக் கோயில்களும் திருவிழாக் கோலம் பூண்டுவிடும். சில கோயில்களில், இந்த மார்கழி மாதத்துக்கு உரியே சில சிறப்பான வழிபாடுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஆண்டாள் கோயில் என்றால் கேட்கவே வேண்டாம், நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.
அதுபோல, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மலை மீது அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாதம் மட்டுமே அதிகாலை 4.30 மணிக்கு மரகத லிங்கம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருச்செங்கோடு மலை மீது, பாகம்பிரியாள் சமேத அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஆண்டுமுழுக்க, மூலவரான அர்த்தநாரீஸ்வரர் சந்நிதிக்கு முன், நாள்தோறும் அதிகாலையில் ஒரு லிங்கம் வைத்து வழிபாடு நடத்தப்படும். ஆனால், இந்த மார்கழியில் மட்டும்தான், பிருகு மகரிஷி வழிபட்ட மரகத லிங்கம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
அதுவும், மார்கழி மாதத்தில், அதிகாலை 5 மணிக்குள், கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மட்டுமே இந்த மரகத லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். பூஜையில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் தரப்பிலிருந்து, மார்கழி மாதம் முழுவதும், மலைக் கோயிலில் அதிகாலை 3.30 மணி முதல் காலை 7 மணி வரை மரகதலிங்கம் அபிஷேகம் நடைபெறும். எனவே, மரகத லிங்கத்தை தரிசிக்க இந்த நேரத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆண்டுதோறும் காண முடியாத, மார்கழியில் மட்டுமே அருள்பாலிக்கும் மரகத லிங்கத்தை பக்தர்கள் கண்டு தரிசிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.