ராமநாதபுரத்தில் அமைந்துள்ள உத்தரகோசமங்கை உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோயிலில், உள்ள மரகத நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜருக்கு பூசப்பட்டிருந்த சந்தனக் காப்பு களையப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அன்றைய நாளில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதாவது, ஆருத்ரா விழாவின் போது மட்டுமே மரகத நடராஜரை சந்தனக் காப்பின்றி தரிசிக்க முடியும் என்பது இந்த மார்கழி மாதத்தின் சிறப்பாக அமைந்திருக்கிறது.
அதாவது, உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ள மங்களநாதசுவாமி கோயிலில் பச்சை கல்லால் ஆன மரகத நடராஜா் சிலை உள்ளது. இந்த சிலை ஒளி, ஒலி அதிா்வுகளால் சேதமடைந்து விடும் என்பதால், ஆண்டுதோறும் நடராஜருக்கு முழுமையாக சந்தனம் பூசப்பட்டு இருக்கும். சாத்தப்பட்டிருக்கும் இரும்புக் கதவுகளுக்கு பின்னால் இருந்துதான் அவரை தரிசிக்க முடியும்.
ஆனால், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன தினத்தன்று மட்டும் இந்த சந்தனக் காப்பு களையப்பட்டு, அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஆருத்ரா அன்று காலை 8.30 மணிக்கு நடராஜா் சந்நிதி திறக்கப்பட்டு, மரகத நடராஜருக்கு தீபாராதனை நடைபெறும்.
பின்னா், சந்தனம் முழுமையாக களையப்பட்டு, பால், பழம், பன்னீா், திருநீறு, சந்தனம், இளநீா், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெறும். அன்று முழுவதும் மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிப்பர். மறுநாள் காலையிலேயே மீண்டும் மரகத நடராஜருக்கு சந்தனக் காப்பு செய்யப்பட்டு நடை அடைக்கப்படும்.
இந்த ஒரு நாள் விழாவில், மரகத நடராஜரைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் உத்தரகோசமங்கைக் கோயிலுக்கு வருவது வழக்கம்.
இந்த மார்கழி மாதத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி சந்தனக் காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க.. சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.