மார்கழி மாதம் பிறந்துவிட்டது. வீட்டு வாயில்களில் கோலங்கள் அலங்கரிக்கின்றன. முன்பெல்லாம் வீட்டு வாயிலில் போடப்படும் மார்கழி கோலங்களை பூசணி பூக்கள் அலங்கரித்து வந்தன.
இன்னமும் பல்வேறு பகுதிகளில் பூசணி பூ வைத்து அலங்கரிக்கும் வழக்கம் இன்றளவும் நீடிக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் வேண்டுமென்றால் இதெல்லாம் சாதாரண ஒரு அலங்காரத்துக்கான நிகழ்வாக இருக்கலாம். ஆனால், முந்தைய காலத்தில் சில கிராமப் பகுதிகளில் ஒரு முக்கிய அறிவிப்புக்கான அழைப்பாக இருந்த பூசணிப் பூ இருந்துள்ளது.
இது குறித்து வரலாற்று ஆசிரியர் மீனாட்சி தேவராஜ் கூறுகையில், பல கிராமங்களில், கோலங்களிலும், வீட்டு தூண்களிலும் பூசணிப் பூவை வைத்து அலங்கரிப்பது, திருமண பந்தத்துக்கான அழைப்பாக அமைந்துள்ளது. அதாவது, எங்கள் வீட்டில் திருமண வயதில் பெண் இருக்கிறார், மணமகன் வீட்டார் பெண் கேட்கலாம் என்பதை சொல்லும் வகையில்தான் இந்த பூசணி பூவை கோலங்களில் அலங்கரித்ததாகக் கூறுகிறார்.
நகரங்களைப் போல அல்லாமல், கிராமங்களில் பெண்கள் வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால், மார்கழி மாதத்தில்தான் கோலம் போடுவதற்காக பெண்கள் வீட்டுக்கு வெளியே வருவார்கள். பூசணி பூவைப் பறிக்கவும் வயல் வெளிக்குச் செல்வார்கள். அப்போது, அவர்கள் வீட்டில் பெண் இருப்பது தெரிய வரும். தங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைக்கு பெண் சரியாக இருப்பாரா என்பதை பிள்ளை வீட்டாரும் வெளியே செல்லும்போது பார்ப்பார்கள். அப்போது வீட்டு வாயிலில் பூசணி பூவை வைத்தால், வரன் கேட்டு வரலாம் என்பதை சுட்டுவதற்காகவும் வைத்திருக்கலாம் என்று மீனாட்சி தேவராஜ் குறிப்பிடுகிறார்.
அதுபோல, மார்கழி மாதத்தில் இதனைக் குறிப்பால் உணர்த்தும்போது அடுத்து வரும் தை மாதத்தில் திருமண நிச்சயங்கள் பேசி முடிக்கப்படுவதும் வழக்கமாம்.
இதனை உறுதி செய்யும் வகையில்தான், வாசலிலே பூசணிப் பூ வச்சிப்புட்டா என்று இளையராஜா இசையில், எஸ்பி பாலசுப்ரமணியம் - ஜானகி குரலில் வெளியான பாடலும் அமைந்துள்ளது.
தை மாதத்தில் அதிக திருமணங்கள் நடக்கும் மாதம் என்ற நிலையில், அதற்கு முன்பு வரும் மார்கழியில் இந்த பூசணி பூ மூலம் பெண் வீட்டாரும் - பிள்ளை வீட்டாரும் பேசி திருமணத்தை முடிக்க சரியான நேரமாக அமைந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
- நிதர்ஷனா ராஜு
இதையும் படிக்க... வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.