ஆண்டாள் - ரங்கமன்னர் 
செய்திகள்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 17

நந்தகோபரை எழுப்பும் பெண்கள்..

இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 17

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்

எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்

கொம்பனர்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே

எம் பெருமாட்டி யசோதா அறிவுறாய்

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்

செம்பொன் கழலடிச் செல்வா பலதேவா

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்

விளக்கம்

வாயில் காப்பானது அனுமதி பெற்று உள்ளே நுழைந்த சிறுமிகள், உறங்கிக்கொண்டு இருக்கும், கண்ணனின் பெற்றோர்களாகிய நந்தகோபன் மற்றும் யசோதை ஆகிய இருவரையும் எழுப்பி அவர்களின் அனுமதியுடன் பலராமனை எழுப்பி, அவனை முன்னிட்டுக்கொண்டு கண்ணனை எழுப்பலாம் என்று தங்கள் திட்டத்தை வெளிப்படுத்தும் பாடல்

பொழிப்புரை

எங்கள் அனைவருக்கும் ஆடை, தண்ணீர் மற்றும் சோறு முதலானவற்றை அறமாக அளித்து எங்களைக் காக்கும் எங்கள் தலைவர் நந்தகோபரே, நீர் எழுந்திருப்பீராக; வஞ்சிக் கொடி போன்ற ஆயர்குலப் பெண்களின் குலக்கொழுந்தாகவும், தான் பிறந்த ஆயர் குலத்தின் விளக்கு போன்று பிரகாசிப்பவரும், எங்களது தலைவியாகவும் விளங்கும் யசோதை அன்னையே, நீர் உமது துயில் கலைந்து, உணர்வு பெற்றவராகத் திகழ வேண்டுகின்றோம். வானினையும் ஊடறுத்து, அதனைத் தாண்டி ஓங்கி நின்றவனாய் மூன்று உலகங்களையும் தனது இரண்டு திருவடிகளால் அளந்தவனே, தேவர்களின் தலைவனே, நீர் உமது உறக்கத்திலிருந்து விழித்து எழ வேண்டும்; செம்பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்களை அணிந்த செல்வன் பலதேவரே, நீரும் உமது தம்பியாகிய கண்ணபிரானும், இனியும் உறங்கலாகாது.

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் 17

செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்

எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக்

கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

மாணிக்கவாசகர்

விளக்கம்

செங்கணவன் = திருமால். திசைமுகன் = நான்முகன். கொங்குண் = நறுமணத்தினை உடைய. ஒரு பெண்மணி தனது தோழிக்கு கூறுவதாக அமைந்த பாடல். பிரமன் திருமால் மற்றுமுள்ள தேவர்கள் ஆகியோரிடத்தில் வைத்துள்ள அன்பினைவிடவும் நம் மீது அதிகமான அன்பினை வைத்து, நம்மிடம் உள்ள குற்றங்களைக் களைந்து நமது மனதினில் எழுந்தருளும் இறைவனின் புகழினை பாடுமாறு ஒருத்தி மற்றவளை ஊக்குவிக்கும் பாடல் .சேவகன் = வீரன்.

பொருள்

நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே, திருமால், நான்முகன் மற்றுள்ள தேவர்கள் ஆகியோரிடத்தில் இல்லாத அன்பும் இன்பமும் எம்மிடம் வைத்துள்ள இறைவன், எங்களது குற்றங்களை நீக்கி, எமது இல்லங்களில் எழுந்தருளி, தனது பொன் போன்ற திருப்பாதங்களை எங்களது தலையில் சூட்டி அருள் புரிந்து, எங்களை பெருமைப்படுத்துகின்றான். அத்தகைய வீரனை, அழகிய கண்களை உடைய அரசினை, அடியார்களுக்கு ஆரமுதமாகத் திகழ்பவனை, எங்கள் பெருமானை, நமக்கு எல்லா நலங்களும் வாய்க்குமாறு, புகழ்ந்து பாடி, தாமரைப் பூக்கள் நிறைந்த குளத்தில் பாய்ந்து நீராடுவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்ற-இறக்கத்தில் வர்த்தகமான ஸ்விக்கி, எடர்னல் பங்குகள்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு!

கைவிடப்பட்ட ரயில் நிலையத்தில் நியூயார்க் மேயராக ஸோரான் மம்தானி நாளை பதவியேற்பு!

10 கோடி பார்வைகளைக் கடந்த சிரஞ்சீவி - நயன்தாரா பட பாடல்!

‘தமிழகத்தில் கஞ்சாவே இல்லை’ என வெட்கமே இன்றி கூறுகிறார் அமைச்சர்: இபிஎஸ் கடும் கண்டனம்!

SCROLL FOR NEXT