வேணுகோபாலன் 
செய்திகள்

கடன் பிரச்னையைத் தீர்க்கும் வேணுகோபாலன்!

பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் சென்னை வேணுகோபால சுவாமி பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை முத்தியால்பேட்டை, பவளக்காரத் தெருவில் வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. திருமழிசை ஆழ்வாரால் வழிபடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம், மண்ணடி கிருஷ்ணர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

முற்காலத்தில் இப்பகுதியில் பவள வர்த்தகம் செழித்திருந்தது. பவள வியாபாரிகள் பலர் இங்கு வாழ்ந்து வந்தனர். இவர்களில் பலர் பகவான் கிருஷ்ணர் மீது பேரன்பு கொண்டிருந்தனர். ஒருநாள் அவர்களில் ஓர் அன்பரின் கனவில் தோன்றிய கிருஷ்ணர், இத்தலத்தில் ஓர் ஆலயம் அமைத்து, தன்னுடைய விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கிறேன் என்று கூறினார்.

மகிழ்ந்த பக்தர், விரைவில் சக நண்பர்களோடு வடதேசம் சென்றார். வட மதுரையான பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் விக்ரகம் ஒன்றைச் சிறப்பாகச் செய்து, யமுனை நதிக்கரை மணலையும், அந்நதி நீரையும் கொண்டுவந்து இங்கே கோயில் எழுப்பி, திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவையும் சிறப்பாக நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பல வண்ணச் சுதை உருவங்களைத் தாங்கி கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கோபுரத்தின் பின்புறம் மாடத்தில் தும்பிக்கையாழ்வாரும் நாகராஜரும் அருள்கின்றனர். தீபஸ்தம்பம், பலிபீடம், கொடிமரம் கடந்து சென்று கருவறைக்கு எதிரே உள்ள கருடாழ்வாரை வணங்கிவிட்டு மூலவர் சன்னதியை அடைகிறோம்.

மூலவர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி ருக்மிணி - சத்யபாமா சமேதராக எழுந்தருளியுள்ளார். உலகளந்தவன் பாத ஸ்பரிசம் எனக்கு ஒப்பானது என்பது போல் அவரது திருவடியை தன் நாவால் தீண்டியபடி காட்சியளிக்கிறது, அவருக்குப் பின் அமைந்துள்ள பசு.

வேணுகோபாலசுவாமியை வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு அமையும்; கடன்பிரச்னை நீங்கும்; வியாதிகள் விலகும் என்பது நம்பிக்கை. மூலவருக்கு அருகிலேயே உற்சவரான கண்ணன், சதுர்புஜனாக ருக்மிணி - சத்யபாமாவுடன் அருள்கின்றார். மூலவருக்கு வலப்புறம் உள்ள சன்னதியில் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் ஆகியோரும் இடப்புறம் ராமானுஜர், மணவாள மாமுனிகளும் அருள்பாலிக்கின்றனர்.

மூலவர் சன்னதிக்கு அருகில் ஒரு சன்னதியில் ஸ்ரீநிவாசனும், அடுத்துள்ள சன்னதியில் ஆண்டாளும், அதையடுத்து ராமபிரான், சீதை, இலக்குவன், அனுமன் ஆகியோரும் திருக்காட்சி தருகிறார்கள். ராமர் சன்னதிக்கு எதிரே பக்த ஆஞ்சநேயர் தனி சன்னதியில் சேவை சாதிக்கின்றார். அருகில் உள்ள கம்பத்தில் வீர ஆஞ்சநேயரும் அருள்கிறார்.

ருக்மிணி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. மேல் இரு கரங்கள் தாமரை மலர்களைத் தாங்க, கீழ் இரண்டு கரங்கள் அபய வரதமாக அமைய, அமர்ந்த திருக்கோலத்தில் தாயார் அருள்கின்றார். அருகில் உற்சவர் தாயாரும் மந்தகாசப் புன்னகையுடன் காட்சி தருகின்றார்.

தாயார் சன்னதியை ஒட்டியுள்ள திருமாமணி மண்டபத்தில் 12 ஆழ்வார்களும் ஆச்சார்ய சுவாமிகள் ஆறு பேரும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவர் சன்னதிக்கும் தாயாரின் தனி சன்னதிக்கும் இடைப்பட்ட மண்டபத்தில் சக்கரத்தாழ்வார் அருள்கின்றார்.

திருமணத்தடை உள்ளவர்கள் ருக்மிணி தாயாரின் பாதத்தில் தங்கள் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்தால் கூடிய விரைவில் அவர்களுக்குத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. தாயாரின் சன்னதியில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டிவிட்டு, தாயாருக்கு பூச்சடை, புடவை, வளையல் தருவதாக வேண்டிக்கொண்டால் விரைவில் குழந்தைப்பேறு அமையுமாம். பார்வை குறைபாடும் இவள் பார்வையால் குணமாகும் என்கிறார்கள்.

சித்திரை பிரம்மோற்சவம், வைகாசியில் வசந்த விழா, ஆவணியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் நவராத்திரி உற்சவம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தை சங்கராந்தி, மாசி மக உற்சவம், ஸ்ரீ ராம நவமி உற்சவம் என வருடத்தில் பல உற்சவங்கள் இக்கோயிலின் சிறப்பு.

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திற்கு வடக்கே பவளக்கார தெருவில் மண்ணடி கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுரங்கத்தில் ரயில்கள் மோதி விபத்து: 65 பேர் படுகாயம்

தங்கம் விலையில் மாற்றம்: எவ்வளவு குறைந்தது?

திராவிடப் பொங்கல் விழாவுடன் மலரட்டும் புத்தாண்டு 2026! தொண்டர்களுக்கு முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து!!

ஜப்பானை பின்னுக்குத்தள்ளியது இந்தியா! உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு!

பருத்திவீரன் பட பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்

SCROLL FOR NEXT