பூம்புகார்: பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் நாண்மதிய பெருமாள் கோயில் தீர்த்தவாரி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
செம்பனார்கோவில் அருகே தலைச்சங்காட்டில் நாண்மதிய பெருமாள் கோயில் உள்ளது. இது 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும்.
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் மாசி மகத்தன்று பூம்புகார் காவேரி கடலோடு கலக்கும் சங்கமத்துறையில் தீர்த்தவாரி செய்ததாகவும், பல்வேறு சூழ்நிலைகளால் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நிகழாண்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே வெள்ளிக்கிழமை அதிகாலை கோயிலில் இருந்து பெருமாளை தோளில் மேளம், தாளம் முழங்கிட ஊர்வலமாக சுமந்து வந்தனர்.
சங்கமத்துறையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பெருமாள் வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தீர்த்தவாரி பெருமாளுக்கு பல்வேறு மங்களப் பொருள்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் நாங்கூர் வேத ராஜன் பட்டாச்சாரியார் தலைமையில் வேத விற்பனர்கள் வேத கோஷம் முழங்கிட கடலில் தீர்த்த வாரி செய்தனர்.
அப்பொழுது திரளான பக்தர்கள் புனித நீராடினார்கள். பின்னர் தீபாரதனை செய்யப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதில் கிராம பொது நல சங்க தலைவர் நாங்கூர் அன்பு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், பாமக பிரமுகர் பிரபாகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ஆனந்தன், வைணவ அடியார்கள், கூட்டத் தலைவர் வழக்குரைஞர் ராமதாஸ், முன்னாள் லயன்ஸ் சங்கத் தலைவர் ஆசிரியர் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.