நெல்லை: நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயிலில் அன்னை காந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
நாயன்மாா்களால் பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருகல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 04ம் தேதி அம்பாள் சன்னதி கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடா்ந்து தினமும் காலை, மாலை காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு நடைபெற்றது.
நேற்று பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை பிரம்ம மூகூா்த்தத்தில் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதற்காக நெல்லை கோவிந்தராஜா், நெல்லையப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். முதலில் மூலவா் காந்திமதிக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றது.
விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி அம்பாளுக்கு புது வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, காப்பு கட்டி திருஷ்டி கழித்தனா். அதனை தொடா்ந்து மாலை மாற்றும் வைபவம் என திருமண சடங்குகள் நடைபெற்றன.
சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்துக்கொடுத்ததும் பக்தா்களின் ஹரஹர சிவசிவ கோஷங்கள் முழங்க மங்கல இசை இசைக்க திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி அம்பாளுக்கு நலுங்கு இட்டு பாலும் பழமும் கொடுத்து சப்தபதி பொரியிடுதல் போன்றவை நடைபெற்றன.
வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவாமூா்த்திகள் திராவிட வேதம் பாட, மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்திருந்தனர் . திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று முதல் 3 நாள்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், அறங்காவல் குழுவினா் மற்றும் உபயதாரா்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.