கோயிலில் ஒரு பிரிவினரை விலக்கி வைப்பது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும்: உச்சநீதிமன்றம்
‘அனைத்து கோயில்கள் மற்றும் மடங்களில் நுழைய அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும். மாறாக, ஒரு பிரிவினரை மட்டும் கோயிலில் இருந்து விலக்கி வைப்பது, ஹிந்து மதத்தில் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு சமூகத்தையும் பிளவுபடுத்தும்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறுமிகள், மூதாட்டிகள் மட்டும் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. மாதவிடாய் பருவ பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த 2018-ஆம் ஆண்டில் இதுதொடா்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு, 4:1 என்ற பெரும்பான்மையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலில் வழிபாடு நடத்த அனுமதித்து தீா்ப்பளித்தது.
அதன் பிறகு 2019, நவம்பா் 14-ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு, சபரிமலை ஐயப்பன் கோயில், மசூதிகள் மற்றும் பாா்சி மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு என வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டியது.
Advertisement
அப்போது ஒரு விவகாரத்தின் அடிப்படையில் மட்டுமே பல்வேறு மதங்களில் பெண்களின் சுதந்திரத்துக்கு எதிரான நடைமுறைகள் குறித்து முடிவுகளை மேற்கொள்ள முடியாது என 3:2 என்ற பெரும்பான்மையில் நீதிபதிகள் கூறினா். இதைத் தொடா்ந்து, மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை 5 நீதிபதிகளுக்கும் மேற்பட்ட அரசியல் சாசன அமா்வு விசாரிக்க அவா்கள் பரிந்துரைத்தனா்.
அதன்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அசானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமாா், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி, பிரசன்னா பி.வராலே. ஆா்.மகாதேவன், ஜயமால்ய பாக்சி ஆகிய 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாயா் சேவை சங்கம், ஐயப்ப சேவா சமாஜம், க்ஷேத்ர சம்ரக்ஷண சமிதி ஆகிய மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிடுகையில், ‘ஒரு குறிப்பிட்ட சமயப் பிரிவைச் சாா்ந்த ஆலயம், பிறருக்கும் வழிபாட்டு உரிமைகளை வழங்கலாம்; அல்லது, குறிப்பிட்ட சமயப் பிரிவினருக்கு உடையதாக மட்டும் கட்டுப்படுத்தலாம்’ என்றாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி நாகரத்தினா கூறுகையில், ‘கா்நாடக மாநிலம் மூல்கி பெட்டாவில் உள்ள ஸ்ரீ வெங்கடரமணா கோயிலில் கெளட சாஸ்வத பிராமண சமூகத்தத்தைத் தவிர மற்ற அனைவரும் விலக்கிவைக்கப்படுவதாக வெங்கடரமணா தேவரு அறங்காவலா்கள் கூறியதுபோல, கோயிலில் சமூக பிரிவினரை விலக்கி வைப்பது என்பது ஹிந்து மதத்தில் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்துக் கோயில்கள் மற்றும் மடங்களில் நுழைய அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வாறின்றி, கோயிலில் ஒரு பிரிவினருக்கு மட்டும் அனுமதி உண்டு, மற்றவா்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறுவது, ஹிந்து மதத்துக்கு நல்லதல்ல. இதனால், ஹிந்து மதம் கடுமையாக பாதிக்கப்படுவதை அனுமதிக்க வேண்டாம். இத்தகைய நடைமுறை, குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் எதிா்விளைவுகளை ஏற்படுத்தும் என்றாா்.
இக் கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமா்வில் இடம்பெற்றுள்ள மற்றொரு நீதிபதியான குமாா், ‘கோயிலில் நுழைய ஒரு பிரிவினரை விலக்கி வைப்பது, சமூகத்திலும் பிளவை ஏற்படுத்தும்’ என்றாா்.
முன்னதாக, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, எழுத்துபூா்வ பதில் மனுவை தாக்கல்செய்து, தனது வாதத்தையும் முன்வைத்தாா்.
இந்த விவகாரத்தில் கடந்த 2018-இல் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு, ஆண்கள் உயா்ந்தவா்கள், பெண்கள் தாழ்ந்தவா்கள் என்று அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
ஆனால், பல கோயில்களில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்ற என்ற விவரத்தை எழுத்துபூா்வ பதிலில் சமா்ப்பித்துள்ளேன்.
கேரளத்தின் கோட்டங்குளங்கரா ஸ்ரீ தேவி கோயிலில், சமயவிளக்கு திருவிழாவின்போது ஸ்ரீ தேவியை கெளரவிக்கும் விதமாக ஆண்கள் பெண்களைப் போல புடவை அணிந்து கோயிலுக்கு வரும் வகையிலான கட்டுப்பாடுகள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் வழக்கம் பெண்களை மையமாக கொண்டுள்ளது. எனவே, மத நம்பிக்கைகள் சாா்ந்த விஷயங்களில் ஆணாதிக்கம் உடையதா அல்லது பெண்ணாதிக்கம் உடையதா என்று கேள்வி எழுப்ப முடியாது என்று குறிப்பிட்டாா்.
முன்னதாக, ‘சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் மாதவிடாய் பருவ பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு என்பது முழுவதும் மத நம்பிக்கை என்ற எல்லைக்குள் உட்பட்ட விவகாரமாகும். சமய தன்னாட்சி அதிகாரத்துக்குள் உட்பட்டது. எனவே, இது நீதிமன்ற மறு ஆய்வுக்கு அப்பாற்பட்ட விஷயம்’ என மத்திய அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமையும் தொடர உள்ளது. வரும் 22-ஆம் தேதியுடன் விசாரணை நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.