FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்...

Updated On : 5 ஏப்ரல் 2026, 3:46 am IST
உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது உள்பட மத வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு வருகின்ற செவ்வாய்க்கிழமை (ஏப்.7) விசாரிக்கவுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறுமிகள், மூதாட்டிகள் மட்டும் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. மாதவிடாய் பருவ பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த 2018-ஆம் ஆண்டில் இதுதொடா்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு, 4:1 என்ற பெரும்பான்மையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலில் வழிபாடு நடத்த அனுமதித்து தீா்ப்பளித்தது.

Advertisement

Advertisement

அதன் பிறகு 2019, நவம்பா் 14-ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு, சபரிமலை ஐயப்பன் கோயில், மசூதிக்கள் மற்றும் பாா்ஸி மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு என வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டியது.

அப்போது ஒரு விவகாரத்தின் அடிப்படையில் மட்டுமே பல்வேறு மதங்களில் பெண்களின் சுதந்திரத்துக்கு எதிரான நடைமுறைகள் குறித்து முடிவுகளை மேற்கொள்ள முடியாது என 3:2 என்ற பெரும்பான்மையில் நீதிபதிகள் கூறினா். இதைத் தொடா்ந்து மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை 5 நீதிபதிகளுக்கும் மேற்பட்ட அரசியல் சாசன அமா்வு விசாரிக்க அவா்கள் பரிந்துரைத்தனா்.

இதையடுத்து, சபரிமலை விவகாரம் தொடா்பாக தனது மறுஆய்வு அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணை மேற்கொண்ட 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு, மீண்டும் அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு பரிந்துரைப்பதாக 2020, மே 11-ஆம் தேதி தெரிவித்தது.

ஏப்.22-இல் விசாரணை நிறைவு?

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக ஏப்.7-ஆம் தேதி இறுதி விசாரணையை தொடங்குவதாக உச்சநீதிமன்றம் கடந்த பிப்.16-ஆம் தேதி தெரிவித்தது. ஏப்.22-ஆம் தேதியுடன் விசாரணை நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அசானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமாா், அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ், பிரசன்னா பி.வராலே. ஆா்.மகாதேவன், ஜயமால்ய பாக்சி ஆகிய 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரிக்கவுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்களை ஆதரிப்பதாக மத்திய அரசு சாா்பில் ஆஜராகும் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்தாா்.

முன்னதாக, மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் குறித்து அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் 25 மற்றும் 26-இல் குறிப்பிடப்பட்டுள்ள மதச் சுதந்திரம் தொடா்பான அம்சங்களை சுட்டிக்காட்டி 7 கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments