மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் ஏராளமானோர் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
முன்னதாக கோயிலில் சுவாமி சன்னதி முன்பு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்கக் கொடிமரம் முன்பு அருள்மிகு மீனாட்சி அம்மன், சொக்கநாதர் பிரியாவிடையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து வேதமந்திரங்கள் மங்கள் வாத்தியங்கள்- முழங்கிட கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதையடுத்து தினமும் மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமி பிரியாவிடையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தினமும் இருவேளைகளிலும் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வரும் நிகழ்வு நடைபெறுகிறது.
விழாவில் 10ம் நாள் திருவிழாவாக வரும் 30-ம் தேதியன்று தெப்பம் முட்டு தள்ளுதல் நிகழ்ச்சியும், வரும் 31-ம் தேதியன்று சிந்தாமணி கிராமத்தில் கதிர் அறுப்புத் திருவிழாவும் நடைபெறுகிறது.
தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் பிப்ரவரி 1-ம் தேதியன்று 12-ம் நாள் திருவிழாவாக கோயிலில் இருந்து அதிகாலை சுவாமியும் அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருள்கின்றனர்.
தொடர்ந்து அன்றைய தினம் தெப்பத்தில் எழுந்தருளும் சுவாமியும் அம்மனும் காலையில் இரண்டு முறையும், இரவு ஒரு முறையும் என மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.
தெப்பத்திருவிழாவை காண மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.