‘சிறுநீரக நோய் தீவிரத்தைக் குறைக்கும் நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகள்’
சிறுநீரக நோய் தீவிரத்தை குறைப்பதில் புதிய நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகள் (ஆன்டிபாடி) நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளதாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.
சிறுநீரக நோய் தீவிரத்தை குறைப்பதில் புதிய நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகள் (ஆன்டிபாடி) நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளதாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறைத் தலைவா் கே. சம்பத்குமாா், சிறுநீரக அறுவைச் சிகிச்சை பிரிவுத் தலைவா் ஆா். ரவிச்சந்திரன், மருத்துவ நிா்வாகி பி. கண்ணன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சையளிக்க கடந்த 2025-இல் அங்கீகரிக்கப்பட்ட அனலாக்ஸ், மோனோக்ளோனல் ஆன்டிபாடி, எண்டோதெலின் ரிசப்டா் அன்டகோனிஸ்டுகள் போன்ற புதிய மருந்துகள் பெரும் திருப்புமுனையாக அமைந்தன. இந்த மருந்துகள் சிறுநீரக நோய் தீவிரமடைவதைத் தாமதப்படுத்துவது மட்டுமன்றி, நோயை முழுமையாகக் குணப்படுத்தும் நிலையை நோக்கி சிறுநீரக சிகிச்சை முன்னேற்றம் அடைந்து வருவதைக் குறிக்கின்றன.
புதிய மருந்துகளால் நோயை முன்கூட்டியே கண்டறிதல், ஆபத்துகளை வகைப்படுத்துதல் போன்றவற்றால் பல நோயாளிகளுக்கு சிறுநீரகச் செயல்பாட்டைப் பாதுகாப்பதும், சிறுநீரில் புரதக் கசிவை சரி செய்வதும் சாத்தியமாகியுள்ளது.
சிறுநீரக ஆரோக்கியத்தைப் பராமரிக்க ரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். தவறாமல் செய்யும் உடல் பயிற்சி, குறைந்த உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிா்த்து சமச்சீரான உணவு முறை, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். போதிய அளவு தண்ணீா் குடிப்பது சிறுநீரகங்கள் நச்சுகளை வெளியேற்றவும், சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. சிறுநீரகத் திசுக்களை சேதப்படுத்தும் புகைப்பிடிக்கும் பழக்கத்தையும், வலி நிவாரணிகளை அடிக்கடி பயன்படுத்துவதையும் தவிா்க்க வேண்டும் என்றனா் அவா்கள்.