கெங்கையம்மன் திருவிழா: ஊரே விழாக்கோலம்...
திருவிழாக்காலம் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால், மாணவர்களும் மகிழ்ச்சியாக வீட்டில் இருப்பர்.
திருவிழாக்காலம் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால், மாணவர்களும் மகிழ்ச்சியாக வீட்டில் இருப்பர். அரசு உள்ளூர் விடுமுறை அளிப்பதால், அரசு, தனியார் நிறுவன ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் தங்களது குழந்தைகளுடன் விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பர்.
கோயிலில் தரப்படும் தீர்த்தம் அம்மை நோயைக் குணப்படுத்தும் அருமருந்தாக உள்ளது.
முதல்வரின் அன்னதானத் திட்டத்தின்படி, நாள்தோறும் பிற்பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தேங்காய் உற்பத்தி மிகவும் அதிகம் என்பதால், தாங்கள் வணங்கும் கெங்கையம்மனுக்கு தேங்காய்களை காணிக்கையாகச் சாற்றி வழிபடுகின்றனர். திருவிழாஅன்று லட்சக்கணக்கான சிதறு தேங்காய்களை அமிர்தி மலையில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மலைவாசிகள் சேகரித்து, ஆற்றங்கரையில் மூட்டைகளாகக் கட்டி, வேன்களில் எடுத்துச் செல்கின்றனர். இவற்றைக் காயவைத்து செக்கு ஆட்டி உணவுக்கும் உடலுக்கும் செக்கு எண்ணைய் பயன்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். பல தலைமுறைகளாக இவர்கள் தேங்காய் சேகரிக்கின்றனர்.
கூழ்ஊற்றுதல், அங்கப்பிரதட்சணம், அடிதண்டா, ஆடுகள்- கோழிகள் பலியிடுதல், ஆண்கள் அம்மன் வேடம் தரித்தல், அம்மனுக்காக பக்தர்கள் மாலையிட்டு வேண்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை மேற்கொள்கின்றனர். ஆடு வெட்டி அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனையும் செலுத்திவருகின்றனர். இவ்வாறாக நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்படுவதும் கோயிலில் சிறப்பாக உண்டு. பக்தர்கள் பெண் வேடமணிந்து அம்மனை வழிபடுதல் போன்ற நூதன முறையில் நேர்த்திக் கடன் செலுத்துவதும் வழக்கமாக இருக்கிறது.
கோயிலுக்கு அருகே சில மீட்டர் தொலைவில் மசூதி, தேவாலயம் ஆகியன இருக்கும்போதும், திருவிழா சுமுகமான முறையில் நடைபெறுவது சிறப்பு.
விழாவையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர், சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் திறம்படச் செய்துள்ளன.
அண்மைக்காலமாக சோஷியல் மீடியாக்களின் வரவு கெங்கையம்மன் திருவிழாவையும் விட்டுவைக்கவில்லை. பக்தர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் உடனுக்குடன் பதிவிட்டு வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பவும் தவறுவதில்லை.
கௌண்டன்ய மகா நதி ஆற்றில் மினி பொருள்காட்சி போல் அமைக்கப்பட்டுள்ள திருவிழாக்கடைகளைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாய் அலைமோதுகின்றனர்.
வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, இக்கோயிலில் ஆண்டுதோறும் சிரசுப் பெருவிழாவுக்கு சில நாள்களுக்கு முன் கோயிலில் கெங்கையம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு விரைவிலேயே திருமணம் கை கூடுகிறது; மாங்கல்ய பலமும் நிலைக்கிறது என்கின்றனர் பக்தர்கள்.
கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி கெளண்டன்ய மகாநதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தற்காலிகக் கடைகள் சுமார் ஒரு மாதக் காலத்துக்கு அமைக்கப்பட்டிருக்கும்.
சிரசுத் திருவிழாவுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பசியையும், தாகத்தையும் போக்க நீர், மோர்ப் பந்தல்கள், குளிர்பானங்கள், அன்னதானம் போன்றவற்றை கெங்கையம்மனின் பக்தர்கள், ஆன்மிக அமைப்புகள், அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர், சமூகச் சேவை அமைப்புகளின் நிர்வாகிகள், தனியார் நிறுவனத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் போன்றோர் இலவசமாக வழங்கி வருகின்றனர்.