30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம்!
தில்லைக்காளியம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்போற்சவம் குறித்து...
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தெப்பகுளம் தூர்வாரி புணரமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்ப உற்சவம் திங்கள்கிழமை இரவு வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆனந்த கூத்தன் நடராஜப் பெருமான்தான் மட்டும் தனியே ஆடவில்லை. காளிதேவியுடன் வாது செய்து, போட்டி அமைத்து ஊர்த்துவ தாண்டவம் ஆடியருளினார். தில்லையின் எல்லையில் வீற்று அகிலாண்ட நாயகியும் தில்லைக்காளியாகி நம் தீவினையை போக்கியருளுகின்றார்.
தீயவைகளை அழிக்கும் கோபசக்தியாக தில்லைக்காளியும், நல்லவைகளை அருள் சாந்த சொருபிணியாக தில்லையம்மனாக இங்கு வீற்றுள்ளனர். இந்தச் சிறப்பு வாய்ந்த தில்லைக்காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 7 ஆம் தேதி இரவு விநாயகர் வழிபாடு, காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
Advertisement
மே 8 ஆம் தேதி சூரியபிரபை வாகன வீதி உலா, 9 ஆம் தேதி சந்திரபிரபை வாகன வீதி உலா, 10-ம் தேதி பூதகி வாகன வீதி உலா, 11-ம் தேதி தெருவடைச்சான் (அன்ன வாகனம்) வீதி உலா, 12-ம் தேதி காமதேனு வாகன வீதி உலா, 13-ம் தேதி கைலாய வாகன வீதி உலா, 14-ம் தேதி ரிஷப வாகன வீதி உலா, மே 15-ம் தேதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
வடக்குவீதி வளாகத்திலிருநந்து தேரில் எழுந்தருளிய தில்லையம்மன் நான்கு வீதிகள் வலம் வந்தார். மழையிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். மே 16 ஆம் தேதி சிவப்பிரியையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மே 17 ஆம் தேதி மஞ்சள்நீர் விளையாட்டு, முத்துப்பல்லக்கு வீதிஉலாவும் நடைபெற்றது.
மே.18-ம் தேதி திங்கள்கிழமை 2.75 கோடி செலவில் தூர்வாரி புணரமைக்கப்பட்ட தில்லையம்மன் கோயில் திருக்குளத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்ப உற்சவம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றறது. தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மே.19-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு திருஊஞ்சல் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வேணு. நரசிங்கபெருமாள் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.